ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் இடையூறை இந்தியா ஒரு மாதத்திற்கு எளிதாகத் தாங்கிக்கொள்ளும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கச்சா எண்ணெய் விலை நீண்ட காலத்திற்கு உயர்ந்த நிலையில் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
நாட்டின் எரிபொருள் கையிருப்பு, பல்வகைப்பட்ட கொள்முதல் உத்தி மற்றும் விரிவடைந்து வரும் எரிசக்தி உள்கட்டமைப்பு ஆகியவற்றை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டங்களால் ஏற்படும் குறுகிய கால விநியோக இடையூறுகளுக்கு எதிராக ஒரு குறிப்பிடத்தக்க பாதுகாப்பை வழங்கும் வகையில், மூலோபாய பெட்ரோலிய கையிருப்பு 76-80 நாட்கள் தற்போது இந்தியாவிடம் உள்ளது.
வளைகுடாப் பகுதிக்கு வெளியே உள்ள உற்பத்தியாளர்களால் உலகளாவிய விநியோகப் பற்றாக்குறை தணிக்கப்படும்.
மொசாம்பிக்கிலிருந்து கிடைக்கும் கூடுதல் எரிவாயு விநியோகம் இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும்”
மேற்கு ஆசியாவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை பழைய நிலைமைக்கு திரும்புவதற்கு இன்னும் 30 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “30 நாட்கள் நீடிக்கும் இந்த மூடல் நடவடிக்கையை இந்தியா சமாளிக்கும். தேவைப்படும்போது கூடுதல் எல்பிஜி சரக்குகளைப் பெறுவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் போன்ற முக்கிய கூட்டாளிகளிடமிருந்து இந்தியா ஆதரவு பெறும்.
கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் எல்பிஜி ஆகியவற்றின் கையிருப்பை 60 நாட்களுக்கு நிறுவனங்கள் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.