மத்திய கிழக்கு பதற்றத்திற்கு மத்தியில், எல்.பி.ஜி கப்பலான Symi குஜராத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அச்சுறுத்தல் நிறைந்த ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து, 20,000 டன் சமையல் எரிவாயுவுடன் இக்கப்பல் இன்று குஜராத்தின் காண்ட்லா தீன்தயாள் துறைமுகத்தை வந்தடைந்தது.
மே 13 அன்று இக்கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது. ஈரான் போர் தீவிரமடைந்த பிறகு, ஜலசந்தியை கடந்து பாதுகாப்பாக இந்தியா வந்தடையும் 11ஆவது எல்பிஜி கப்பல் இதுவாகும்.
இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் வணிக சிலிண்டர் விலை 993 ரூபாய் அதிகரித்தது. சீரான கப்பல் வரத்து இருந்தால் மட்டுமே நெருக்கடியை சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இதற்கிடையே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் லிட்டருக்கு 3 ருபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் உயரும் என்ற அச்சமும் நிலவுகிறது. மக்கள் சிக்கனமாக எரிபொருளை பயன்படுத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் நாட்டின் கச்சா எண்ணெய் இருப்பில் 15% சரிவு ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி கடைசி வாரத்தில் 107 மில்லியன் பேரல்களாக இருந்த இந்தியாவின் எண்ணெய் இருப்பு, தற்போது 91 மில்லியன் பேரல்களாகக் குறைந்துள்ளது.
வரும் நாட்களில் புதிய சரக்குகள் வரவில்லை எனில், இந்தியாவின் வசம் இன்னும் வெறும் 18 நாட்களுக்கு மட்டுமேயான எரிபொருள் இருப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.