இந்தியா

இந்தியாவில் தீவிரமடையும் உணவுப் பாதுகாப்பு சோதனைகள்: வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மைகள்

இந்திய பதிப்பில் பாமாயில் பயன்படுத்தப்படுவதோடு, எவ்வித முன்பக்க எச்சரிக்கைக் குறியீடுகளும் இடம்பெறுவதில்லை.

பாக்கெட்டின் முன்பகுதியில் சர்க்கரை அல்லது கொழுப்பு அளவு குறித்த எச்சரிக்கை லேபிள்களை ஒட்டுவதற்கு உணவு உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்தியாவில் பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனைத் துறை $100 பில்லியனுக்கும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ள நிலையில், அதனைக் கண்காணிக்கும் ஒழுங்குமுறை அமைப்புகளின் செயல்பாடுகளையும் மீறி பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவது அண்மைய சோதனைகளில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவுப் பாதுகாப்புத் துறை சோதனைகளில், காலாவதி தேதிகளை மாற்றி அமைத்தல், நுகர்வோரை திசை திருப்பும் பொய்யான லேபிள்கள் மற்றும் சுத்தமின்மை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

ரட்டை நிலைகள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பிரபல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள், வெளிநாடுகளில் விற்கப்படும் அதே தயாரிப்புகளோடு ஒப்பிடும்போது ஊட்டச்சத்து அளவிலும் தயாரிப்பு முறையிலும் பெருமளவு வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, லண்டன் சந்தையில் விற்கப்படும் 'பாண்டா' பானத்தைக் காட்டிலும் இந்தியாவில் விற்கப்படும் பானத்தில் சுமார் மூன்று மடங்கு கூடுதல் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது.

அதேபோல், பிரித்தானியாவில் விற்பனையாகும் 'மேகி' நூடுல்ஸ் தயாரிப்பில் சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்தப்பட்டு, அட்டையின் முன்பகுதியில் எச்சரிக்கை குறியீடுகளும் இடம்பெறுகின்றன. ஆனால், இந்திய பதிப்பில் பாமாயில் பயன்படுத்தப்படுவதோடு, எவ்வித முன்பக்க எச்சரிக்கைக் குறியீடுகளும் இடம்பெறுவதில்லை.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தற்போதைய விதிகளின்படி, பாக்கெட்டின் பின்பகுதியில் சிறிய எழுத்துக்களில் பொருட்களின் பட்டியலை அச்சிட்டால் போதுமானது. பாக்கெட்டின் முன்பகுதியில் சர்க்கரை அல்லது கொழுப்பு அளவு குறித்த எச்சரிக்கை லேபிள்களை ஒட்டுவதற்கு உணவு உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும், பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2026-இல் உணவு பாக்கெட்டுகளின் முன்பகுதியிலேயே ஊட்டச்சத்து எச்சரிக்கை லேபிள்களைக் கட்டாயமாக்கும் புதிய முன்மொழிவை அரசு கொண்டுவந்தது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உணவுப் பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே தலைமையிலான குழு, மே மாதத்தில் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது. மும்பை கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த உணவுப் பொருட்களில் போலி ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலான ஊட்டச்சத்து லேபிள்களும், தவறான காலாவதி தேதிகளும் ஒட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, கனடா நாட்டின் உணவு ஆய்வு முகமையும் இதன் பின்னணியைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு

2020-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு ஆய்வுகளில், பரிசோதிக்கப்பட்ட 1,00,000-க்கும் மேற்பட்ட உணவு மாதிரிகளில் சுமார் 20 சதவீதம் பாதுகாப்பற்றவையாகவும், தரம் குறைந்தவையாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், விரைவு விநியோக முறையில் செயல்படும் வணிகச் சேவைகளின் சேமிப்புக் கிடங்குகளில் கரப்பான் பூச்சிகள், எலிகள் மற்றும் அழுகிய காய்கறிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அத்துறையின் மீதும் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

உணவு சந்தை அதிவேகமாக விரிவடைந்து வரும் சூழலில், நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உணவுப் பாதுகாப்புத் துறை இன்னும் கடுமையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT