மேற்கு ஆசிய போர் நெருக்கடியை சுட்டிக்காட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பேசிய பிரதர் மோடி,
பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கவும், ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும், வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்கவும், மெட்ரோ ரயில்களில் பயணிக்கவும், வீட்டிலிருந்தே வேலை செய்யவும், உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும், பொது போக்குவரத்தில் பயணிக்கவும் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் அறிவுரைகள் அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகின்றன என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"பிரதமர் எப்போதும் தனது தோல்விகளுக்கான பொறுப்பை மக்கள் மீதே சுமத்துகிறார். கடந்த 12 ஆண்டுகளில் நாடு இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.
மக்கள் எதை வாங்க வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்பதைக்கூட அரசாங்கம் தீர்மானிக்கும் நிலைக்கு நாடு வந்துவிட்டது. சமரசம் செய்துகொள்ளும் ஒரு பிரதமரால் நாட்டை வழிநடத்த முடியாது' என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், பிரதமரின் இந்த கோரிக்கைகள் நாட்டின் மிக மோசமான பொருளாதாரச் சூழலையே பிரதிபலிக்கின்றன என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.