மத்திய கிழக்கு நாடான ஈரானில் நிலவி வரும் போர்ச் சூழல் உலகளாவிய சந்தையை உலுக்கி வரும் நிலையில், இந்தியா தனது முக்கியப் பொருளாதாரக் காரணிகளான
எரிபொருள் (Fuel), உரம்(Fertiliser), அந்நியச் செலாவணி (Forex) ஆகிய '3Fs' காரணிகளில் மிகக் தீவிரக் கண்காணிப்பைச் செலுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்து வருகிறார்.
மும்பையில் நடைபெற்ற சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் 37-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தற்போதைய சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விரிவாகப் பேசினார்.
கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியப் பாதையான 'ஹார்முஸ் ஜலசந்தியில்' ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக கச்சா எண்ணெயின் விலை மற்றும் உரங்களின் விலை சர்வதேச சந்தையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இதன் நேரடி பாதிப்பாக இந்தியாவில் கடந்த 11 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹7.38 வரை உயர்த்தப்பட்டு, 4 வது முறையாக இன்றும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் தேவையில் 85% முதல் 90% வரை இறக்குமதியையே நம்பியிருப்பதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அண்மையில் 97 ரூபாய் வரை சரிந்து மீண்டுள்ளது.
இந்தச் சூழலில் அந்நியச் செலாவணி இருப்பைத் தக்கவைக்க, "அடுத்த ஒரு வருடத்திற்குத் தங்கம் வாங்குவதைத் தவிருங்கள், அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களை ஒத்திவையுங்கள் மற்றும் தேவையற்ற இறக்குமதிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்" என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் விடுத்திருந்த வேண்டுகோளை நிதியமைச்சர் மீண்டும் நினைவு கூர்ந்தார்.
இந்த போர் வெறும் உலக அரசியல் மட்டுமல்லாமல், சாதாரண வணிகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார் அமைச்சர். இதனால், கப்பல் போக்குவரத்து தாமதமாகி சரக்குக் கட்டணங்கள் உயரும், மூலப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் மற்றும் ஏற்றுமதி ஆர்டர்களில் பெரும் நிச்சயமற்ற தன்மை நிலவும் என்றும் கூறினார்.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும், பொதுமக்களைப் பாதுகாக்க மத்திய அரசு எரிபொருட்களுக்கான கலால் வரியைக் குறைத்துள்ளது.
இதனால் மத்திய அரசுக்கு ₹1 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ₹8.1 லட்சம் கோடி நிலுவைத் தொகையை, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் 45 நாட்களுக்குள் விரைந்து வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
இந்தியப் பொருளாதாரம் முற்றிலுமாகச் சரிந்துவிட்டது போன்ற ஒரு அவநம்பிக்கையான பிம்பத்தைச் சிலர் திட்டமிட்டுப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டிய நிர்மலா சீதாராமன், இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் இப்போதும் வலுவாகவும், நெகிழ்வுத்தன்மையுடனும் இருப்பதாகக் கூறினார்.
இதற்குச் சான்றாக நாட்டின் வலுவான ஜிஎஸ்டி வரி வசூல் உயர்வையும், தொடர்ந்து நீடிக்கும் உள்நாட்டுத் தேவைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.