உஜ்ஜல் புயான் 
இந்தியா

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா?.. இந்தியாவில் சுதந்திரம் சுருங்கி வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை

காசாவுக்காக போராடுவது தேசபக்தி அல்ல" என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியதையும் உஜ்ஜல் புயான் சுட்டிக்காட்டி விமர்சித்தார்.

இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளுக்கான இடம் படிப்படியாக சுருங்கி வருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கவலை தெரிவித்துள்ளார்.

போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவன பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசினார்.

முதலாவதாக, "கங்கை நதியில் படகில் வைத்து அசைவம் சாப்பிடுவது சட்டப்படி குற்றமில்லை. ஆனால் மத்தியப் பிரதேச பாஜக அரசின் காவல்துறை, புனித நதியை அசுத்தம் செய்வதாக கூறி 14 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது. அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு 3 மாதம் சிறையில் கழித்தனர்.

இந்த சம்பவம் தேசத்தின் குடிமக்கள் அரசியலமைப்பு தங்களுக்கு வழங்கிய சட்டபூர்வ உரிமையின் கீழ் செயல்படும்போதும் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் தொடர்ச்சியான ஒரு போக்கை காட்டுகிறது.

இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளுக்கான இடம் படிப்படியாக சுருங்கி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருவரின் பார்வையை பகிர்ந்து கொள்ளவும், அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தற்கான சுதந்திரம் உள்ளது. விவாதமும், மாற்றுக்கருத்தும் தான் ஜனநாயகத்தின் சாரம். துரதிஷ்டவசமாக அது குற்றமாக மாற்றப்பட்டு வருகிறது. " என தெரிவித்தார்.

மும்பை உயர் நீதிமன்றம் மீது விமர்சனம்

மும்பையில் காசா மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த அனுமதி கோரியபோது, "இந்தியாவில் உங்களுக்குப் பிரச்சனைகளே இல்லையா? காசாவுக்காக போராடுவது தேசபக்தி அல்ல" என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியதையும் உஜ்ஜல் புயான் சுட்டிக்காட்டி விமர்சித்தார்.

அமைதியான முறையில் மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதும் ஜனநாயக உரிமையே என்றும், நீதிமன்றங்கள் இதுபோன்ற கருத்துச் சுதந்திரத்தைக் முடக்கும் வகையில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

ஜாமீன் தாமதம்

சாதாரணப் போராட்டங்கள், சமூக வலைத்தளப் பதிவுகள் மற்றும் மீம்களுக்குக்கூட கடுமையான குற்றவியல் சட்டங்களைப் பயன்படுத்துவது தனிநபர் சுதந்திரத்தைப் பறிப்பதாகும்.

நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கினாலும், அது நீண்டகாலச் சிறைவாசத்திற்கு பிறகே கிடைக்கிறது.

மேலும் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தக் கூடாது என்ற ஜாமீன் நிபந்தனைகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மறைமுகமாக முடக்குகின்றன.

நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மற்றும் போக்கை வழக்கறிஞர்களும் சட்ட மாணவர்களும் நடுநிலையோடு விமர்சன கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்.

நம்மை நாமே புகழ்ந்துகொள்வதை விட அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்புகளைக் காப்பாற்றுவதே நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை உயர்த்தும்" என்று தெரிவித்துள்ளார்.