இந்தியா

இந்திய பாதுகாப்புத்துறையில் வரலாற்றுச் சாதனை: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டோமாஹாக் ஏவுகணை சோதனை வெற்றி!

சீனா, பாகிஸ்தானுக்கு செக்: இந்தியாவின் ‘தேசி டோமாஹாக்’ ஏவுகணை சோதனை வெற்றி..

இந்தியாவின் பாதுகாப்பு ஆற்றலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'லாங் ரேஞ்ச் லேண்ட் அட்டாக் குரூஸ் ஏவுகணை' (LRLACM) நேற்று (ஜூன் 15) ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டோமாஹாக்’ ஏவுகணைகளுக்கு இணையான தொழில்நுட்பம் கொண்ட இந்த ஏவுகணைக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்ட அம்சமாகும்.

இந்த ஏவுகணை சுமார் 1,000 முதல் 1,500 கிலோ மீட்டர் தொலைவு வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்டது.

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டால் அண்டை நாடுகளின் முக்கிய நகரங்களை எளிதாக தாக்கக்கூடியது.

பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தலைமையகம் உள்ள ராவல்பிண்டி, தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் முக்கிய பொருளாதார மையமான கராச்சி ஆகிய நகரங்கள் நேரடியாக இந்தியாவின் தாக்குதல் எல்லைக்குள் வருகின்றன.

கடந்த 2025 மே மாதம் ஏற்பட்ட மோதல்களின் போதே இத்தகைய ஏவுகணையின் தேவை உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள லாசா ராணுவ தளம், செங்டு ராணுவ மையம், உரும்கி மற்றும் குன்மிங் ஆகிய மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை இது துல்லியமாக தாக்கும் ஆற்றல் கொண்டது.

ரேடார்களால் கண்டறிய முடியாது..

பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று நடந்த சோதனை அனைத்து தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு இலக்குகளையும் பூர்த்தி செய்துள்ளது.

வழக்கமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் விண்வெளிக்குச் சென்று பின் இலக்கைத் தாக்கும்.

ஆனால், இந்த ‘டோமாஹாக்’ ஏவுகணை தரைமட்டத்திற்கு மிக அருகிலேயே பறந்து செல்லும். இதனால் எதிரி நாடுகளின் ரேடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இதனை எளிதில் கண்டறிய முடியாது.

பிரம்மோஸ் ஏவுகணைக்கு சிறந்த மாற்று..

கடந்த மே 10, 2025 அன்று நடந்த மோதலின்போது இந்தியாவின் அதிவேக 'பிரம்மோஸ்' ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல் திறனை முற்றிலுமாக முடக்கின.

இருப்பினும், ஒரு பிரம்மோஸ் ஏவுகணையின் விலை மிக அதிகம். நீண்ட காலம் நீடிக்கும் போர்களில் அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவது கடினம்.

அதற்கு மாற்றாக, வெறும் ₹25 கோடி செலவில் எதிரி நாட்டு எல்லைக்குள் நீண்ட தூரம் சென்று தாக்கும் மலிவு விலை ஆயுதமாக இந்த LRLACM விளங்கும் என்று கூறிவருகின்றனர்.

'மேட் இன் இந்தியா'..

பெங்களூருவைச் சேர்ந்த வானூர்தி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் DRDO ஆய்வகங்கள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளன.

இது 2016 முதல் பல சோதனை தோல்விகளைச் சந்தித்த 'நிர்பய்' ஏவுகணை திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.

தரைப்படை, போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் என மூன்றில் இருந்தும் ஏவக்கூடிய இந்த ஏவுகணை, இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்திய ராணுவத்தில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.