வெளிநாட்டினர் மீட்பு
இந்தியா

இந்தியாவுக்கு அழைத்து வந்து சைபர் குற்றத்தில் ஈடுபட வைத்த கும்பல்: 164 வெளிநாட்டினர் மீட்பு

ஐ.டி. போன்ற வேலைகள் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து வந்துள்ளனர்.

இந்தியாவில் அதிக சம்பளத்துடன் வேலை தருவதாகக் கூறி அழைத்து வரப்பட்ட 164 வெளிநாட்டினர், சைபர் மோசடி கும்பலிடம் இருந்து டெல்லி போலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி போலீசாரின் குற்றப்பிரிவு நடத்திய அதிரடி சோதனையில், நொய்டாவின் செக்டார் 136 பகுதியில் செயல்பட்டு வந்த போலி சர்வதேச கால் சென்டரில் இருந்து 164 பேர் மீட்கப்பட்டனர்.

இவர்களில் 92 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள். 72 பேர் மலேசியாவைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் ஐடி வேலை மற்றும் அதிக சம்பளம் கிடைக்கும் எனக் கூறி இவர்களை மோசடி கும்பல் அழைத்து வந்துள்ளது.

பாஸ்போர்ட்டுகள் பறிப்பு

இந்தியாவுக்கு வந்ததும் அவர்களது பாஸ்போர்ட்டுகள் பறிக்கப்பட்டு, வெளியே செல்லவும் சுதந்திரமாக நடமாடவும் தடை விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மறுத்தவர்களைத் தாக்கி, கட்டாயப்படுத்தி சைபர் மோசடியில் ஈடுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமூக வலைதளங்களில் போலியான பெண் அடையாளங்களை உருவாக்கி, வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் நட்பை ஏற்படுத்தி, பின்னர் போலி முதலீட்டுத் திட்டங்களில் பணம் செலுத்த வைப்பதே இவர்களின் மோசடி முறையாக இருந்துள்ளது.

செல்போன்கள், கணினிகள், லேப்டாப்கள் பறிமுதல்

இந்தச் சோதனையில் 355 செல்போன்கள், 168 கணினிகள், 26 லேப்டாப்கள், 53 சிம் கார்டுகள் மற்றும் 174 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் 25 வயதான மலேசியர் டான் குவான் வெய் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள இந்தியாவை சேர்ந்த சுனில் குமார் மற்றும் சுஷில் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

மீட்கப்பட்ட 164 பேரும் மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், உரிய நடைமுறைகளுக்குப் பிறகு சொந்த நாடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சைபர் மோசடி மட்டுமின்றி மனிதக் கடத்தலும் இணைந்து செயல்படும் சர்வதேச கும்பல்களின் ஆபத்தை இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்த கும்பலிடம் இருந்து மலேசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் தப்பித்து, நடந்த கொடுமையை விவரித்ததால் இந்த கும்பல் சிக்கியுள்ளது.

SCROLL FOR NEXT