இந்தியா

100% எத்தனால் எரிபொருள் பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் - நிதின் கட்கரி அறிவிப்பு

நிதின் கட்கரியின் மகன்களான நிகில் கட்கரி மற்றும் சாரங் கட்கரி ஆகியோர் தங்களின் சிஐஏன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மானஸ் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் மூலம் எத்தனால் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் 100 சதவீதம் எத்தனால் (E100) எரிபொருளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்

இதன்மூலம் இனிவரும் காலங்களில் வாகனங்கள் முழுமையாக எத்தனால் எரிபொருளில் மட்டுமே இயங்குவதற்கு சட்டப்பூர்வமாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒப்புதல்

நாக்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நிதின் கட்கரி,

கடந்த வெள்ளிக்கிழமை, வாகனங்களில் 100% எத்தனால் எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான விதிகளை வகுத்து, அதற்கான சட்டப்பூர்வ கோப்பில் நான் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டேன்.

இந்த ஒப்புதலின் மூலம், பெட்ரோலுக்கு இணையான ஒரு மிகச்சிறந்த மற்றும் மலிவான மாற்றாக எத்தனால் உருவெடுக்கும்.

இதன் மூலம், இந்தியா ஆண்டுதோறும் புதைபடிவ எரிபொருள் இறக்குமதிக்காகச் செலவிடும் ரூ. 22 லட்சம் கோடி பொருளாதாரச் சுமை படிப்படியாகக் குறையும்.

எத்தனால்

எத்தனால் என்பது கரும்புச் சர்க்கரை ஆலைகளின் கழிவு, சோளம் மற்றும் இதர விவசாயக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் பயோ எரிபொருளாகும்.

இந்தியாவில் தற்போது 30 சதவீதம் வரையிலான எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு அனுமதி உள்ளது. இதற்கான சுங்க வரியும் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 100 சதவீத எத்தனால் எரிபொருளுக்கு மத்திய அரசு பச்சை கொடி காட்டியுள்ளது.

விமர்சனம்

மத்திய கிழக்கு பதற்றத்தால் ஏற்பட்டுள்ள பெட்ரோல் தட்டுப்பாடுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்திருந்தாலு இது தனிப்பட்ட லாபத்திற்கானதா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

நிதின் கட்கரியின் மகன்களான நிகில் கட்கரி மற்றும் சாரங் கட்கரி ஆகியோர் தங்களின் சிஐஏன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மானஸ் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் மூலம் எத்தனால் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

எத்தனால் கலந்த பெட்ரோல் வாகனங்களின் நீண்டகால செயல்திறனை பாதிக்கும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் வல்லுநர்கள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.