இந்தியா

ஊக்கமருந்து புதிய சட்டம் | பயன்படுத்துபவர்கள் மற்றும் விநியோகம் செய்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை

புதிதாக திருத்தம் செய்யப்பட்ட ஊக்கமருந்து தடுப்பு சட்டம் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரால் வெளியிடப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளாக உலகளாவிய ஊக்கமருந்து குற்றவாளிகள் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா இருந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் புதிதாக திருத்தம் செய்யப்பட்டுள்ள தேசிய ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பொருட்களை உபயோகம் செய்வதும், அவற்றை விளையாட்டு வீரர்களுக்கு விநியோகம் செய்வதும் குற்றமாகும் என அறிவித்துள்ளது.

ஊக்கமருந்து பயன்படுத்துபவர்கள் மற்றும் அதனை விநியோகம் செய்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஐந்து லட்சம் அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் தேவையான கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் விளையாட்டு அமைச்சகத்தின் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அவற்றை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜுன் 18ம் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெறப்பட்ட கருத்துக்களை கருத்தில் கொண்டு பிறகு, திருத்தப்பட்ட மசோதா பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.