எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கூட்டம் இன்று (ஜூன் 8) டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சுமார் 23 கட்சிகள் தங்களின் பங்கேற்பை உறுதி செய்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்குப் பிறகு தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்த்துள்ளது.
மேலும், ஆட்சியிலும் பங்கு பெற்றது. இதன்மூலம் காங்கிரஸ் தங்களின் முதுகில் குத்திவிட்டதாகவும், துரோகம் இழைத்துவிட்டதாகவும் தி.மு.க. கடுமையாக சாடியது.
காங்கிரஸ் கட்சியுடன் உறவு முறிந்துவிட்டதால், 'இந்தியா' கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக தி.மு.க. அறிவித்தது. தி.மு.க. மட்டுமன்றி பல்வேறு கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சிக்கு உரசல் போக்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெற இருக்கிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.