இந்தியா

இந்தியாவை உலுக்கிய சம்பவம்... கும்பலால் துன்புறுத்தப்பட்ட 10ம் வகுப்பு சிறுமி - முக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

பீகாரின் ஜமுய் பகுதியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், மர்ம கும்பல் ஒன்றால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கில், முக்கிய குற்றவாளியான நந்தன் யாதவ்வை காலில் சுட்டு பிடித்ததாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.

வீடியோ

செப்.19 அன்று ஜமுய்-லகிசராய் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவன் மற்றும் மாணவி ஒருவரை, அங்கிருந்த மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து, அச்சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். இந்த வீடியோக்கள் நேற்று இணையத்தில் வெளியாகி பெறும் பரபரப்பை ஏற்படுத்தின.

அச்சிறுமி தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சிய பிறகே, அவ்வளவு நேர போராட்டத்திற்கு பிறகு அக்கும்பல் அவர்களை விடுவித்துள்ளது.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, பீகாரின் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் கே.எஸ். அனுபம் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் பீகார் காவல்துறை ஈடுப்பட்டிருந்தது.

துப்பாக்கிச்சூடு

இந்நிலையில் இச்சம்பவத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி நந்தன் யாதவை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.

கைது நடவடிக்கையின்போது போலீசாருடன் மோதல்போக்கில் நந்தன் யாதவ் ஈடுபட்டதாகவும், அதனால் காலில் சுட்டுப்பிடித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின்போது மற்றொரு குற்றவாளியும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர்.

5 பேர் கைது

இந்த வழக்கில் ஏற்கனவே 3 மைனர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தற்போது மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மிஞ்சிய மற்ற இருவரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் பிஸ்வஜீத் தயால் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT