இந்தியாவில் மட்டும்தான் இதுபோன்ற வினோதங்களா, அல்லது உலகின் வேறுசில நாடுகளிலும் இதுபோல நடக்குமா என தெரியவில்லை. எந்த ஒரு நாடு பெண்களை தெய்வங்களா வழிபட்டு வருகிறதோ, அதே நாட்டில்தான் பாலியல் குற்றவாளிகளும் சுதந்திரமாக உலாவி வருகின்றன. அவர்களுக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்படுகிறது.
தற்போது உ.பி.யில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் இந்தியாவிற்கு புதிதல்ல. இருப்பினும் இதுபோன்ற கேவலமான சம்பவங்கள் எப்போது நிற்கும், இந்த மக்களின் மனநிலை எப்போது மாறுபடும் என்பதுதான் பெரும் கேள்வியாக உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில், ஜாமினில் வெளிவந்த இந்து யுவ வாஹினி அமைப்பின் முன்னாள் தலைவர் சுஷில் பிரஜாபதிக்கு, அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சட்டம் பயிலும் கல்லூரி மாணவி ஒருவரிடம் நீதிமன்றத்தில் ஒரு அறை வாங்கித் தருவதாகவும், சட்டப் பயிற்சியில் உதவுவதாகவும் கூறி சுஷில் பிரஜாபதி பழகியுள்ளார்.
பின்னர், அந்த மாணவியை ஒரு ஃபிளாட்டிற்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், அளித்த புகாரின் பேரில், முராத்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த சுஷில் பிரஜாபதியைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவரை பிடித்து தருபவருக்கு ரூ.25,000 வெகுமதியும் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 11, 2025 அன்று அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டபோது, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஆர்வலர்கள் முராத்நகர் காவல் நிலையத்தில் கூடி, அமளியில் ஈடுபட்டு, போராட்டம் நடத்தினர்.
தற்போது, கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு, சுஷில் பிரஜாபதி மே.17 அன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் சிறை வாசலிலேயே அவருக்குப் பூமாலைகள் அணிவித்து, தோள்களில் சுமந்து தியாகிப்போல உற்சாகமாக வரவேற்றனர்.
வாகனங்களின் அணிவகுப்புடன், பலத்த கோஷங்களை எழுப்பியவாறே அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் முன்னரும் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.