இந்தியா

உ.பி.யில் தாயை மணப்பதற்காக ஒன்றரை வயது குழந்தையை தரையில் அடித்தே கொன்றக் கொடூரன்!

ஒன்றரை வயதுக் குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்ற கொடூரனைப் போலீசார் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் திருமணத்திற்கு தடையாக இருந்ததாகக் கூறி, ஒன்றரை வயது குழந்தை தரையில் அடித்தேக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சுமித் மற்றும் ரதி என்பவர்களின் ஒன்றரை வயது மகன் ஆரவ். சுமித் மற்றும் ரதி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு சென்றுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே ரதிக்கு சுமித்தின் அத்தை மகன் விராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து விராஜ் ரதியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தையை காரணம்காட்டி ரதி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (மே.29) ரதி தனது பெற்றோர் வீட்டிலிருந்து அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த தகவலறிந்து அங்குசென்ற விராஜ், குழந்தை ஆரவ்விற்கு மிட்டாய் வாங்கித்தருவதாக அங்கிருந்து தூக்கிச் சென்றுள்ளார்.

ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தையை தரையில் தூக்கி பலமுறை அடித்துக் கொலை செய்ய முயற்சித்துள்ளான். இதில் குழந்தையின் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வர, அவர்களை பார்த்தவுடன் குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அங்கிருந்து சிறிது தூரம் சென்று குழந்தையை சாலையிலேயே போட்டுவிட்டு ஓடிவிட்டான்.

இதனையடுத்து தகவலறிந்த குடும்பத்தினர் ஆரவ்வை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய விராஜை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்தனர்.

தொடர்ந்த தேடுதலில் மைன்புரி சாலை அருகே விராஜை போலீசார் பிடித்துள்ளனர். ஆனால் போலீசாரை விராஜ் துப்பாக்கியால் சுட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக அவனது காலில் சுட்ட போலீசார், பின்னர் கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விராஜ்மீது ஷிகோஹாபாத் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT