இந்தியா

குஜராத் மாநிலத்தில் கால்நடைகளுக்கான டானிக்கை குழந்தைகளுக்கு விற்ற மருந்துக்கடை உரிமையாளர் கைது!

பெரிய கேன்களில் இருந்த கால்நடை மருந்தை சிறிய பாட்டில்களில் மாற்றி குழந்தைகள் மருந்தாக விற்பனை செய்து வந்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் நகரில், கோபிபுரா பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவக் கடை ஒன்றில் கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படும் டானிக்கை குழந்தைகளுக்குரிய மருந்தாக மாற்றி விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் பொதுமக்களின் சுகாதாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கோபிபுரா பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவக் கடை ஒன்றில் கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படும் டானிக்கை குழந்தைகளுக்குரிய மருந்தாக மாற்றி விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சூரத் நகர் சிறப்புப் படை காவல்துறையினர் அந்த மருத்துவக் கடையில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில், கடை உரிமையாளரான 51 வயது முகமது சஜித் இப்ராஹிம் முல்லா என்பவர் கைது செய்யப்பட்டதாக துணை காவல் ஆணையர் ராஜ்தீப்சிங் நாகும் தெரிவித்தார். குற்றவாளி செய்த மோசடி என்னவென்றால், அவர் கால்நடைகளுக்கான தீவன சத்து மருந்தான 'ஹிமாலயா லிவ்.52 ப்ரோடெக் லிகியூட்' என்ற பெரிய அளவிலான (1 லிட்டர் மற்றும் 5 லிட்டர்) கேன்களை வாங்கியுள்ளார். பின்னர் அதில் இருக்கும் திரவத்தை சிறிய 60 மி.லி மற்றும் 100 மி.லி பாட்டில்களில் மாற்றி ஊற்றியுள்ளார்.

போலி லேபிள்கள் மூலம் மோசடி

இவ்வாறு சிறிய பாட்டில்களில் மாற்றப்பட்ட திரவத்தின் மீது, சிறு குழந்தைகளுக்கான மருந்தாகப் பயன்படுத்தப்படும் 'ஹிமாலயா லிவ்.52 ட்ராப்ஸ்' என்ற பெயரைக் கொண்ட போலி லேபிள்களை ஒட்டியுள்ளார். இந்த போலி மருந்துகளை அசல் குழந்தை மருத்துவ மருந்துகள் போல் சித்தரித்து, அவற்றின் உண்மையான விலையை விட இருமடங்கு அதிக விலைக்கு வாடிக்கையாளர்களுக்கு விற்று வந்துள்ளார். இந்த அதிரடி சோதனையின் போது கடையில் இருந்து சுமார் ரூ.31,195 மதிப்புள்ள போலி மருந்துகள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாக அத்வா காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் விஷம் மூலம் காயம் ஏற்படுத்துதல், மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அலட்சியமாகச் செயல்படுதல், ஆவண மோசடி மற்றும் ஒரு மருந்தை மற்றொரு மருந்தாக விற்றல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கடையில் மருந்துகளை வாங்கி, அதன் மூலம் தங்களது குழந்தைகளுக்கு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டிருந்தால், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுமாறும், உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர்கள் தாங்கள் வாங்கும் மருந்துகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மருத்துவர்களிடம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT