மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீதம் உயர்த்துவதற்கான திருத்தப்பட்ட மசோதாவை தாக்கல் செய்வதற்கான மத்திய அரசு வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சிறப்பு நாடாளுமன்றத்தை கூட்ட முடிவு செய்துள்ளது.
இந்த மசோதாவை மிகவும் முக்கியமானது, அனைவரும் ஒரே குரலில் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இரு அவைகளின் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடி எழுதியுள்ள கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியம்சங்கள் பின்வருமாறு:-
விரிவான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு நாரி சக்தி வந்தன் அதினியமை (Nari Shakti Vandan Adhiniyam) அதன் உண்மையான உணர்வோடு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கான காலம் தற்போது வந்துவிட்டது என்ற முடிவை நாங்கள் எட்டியுள்ளோம்.
2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களும் சட்டமன்றத் தேர்தல்களும், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுடன் நடத்தப்படுவது மிக அவசியமாகும்.
திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக, நாம் அனைவரும் ஒரே குரலில் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காகவே நான் இக்கடிதத்தை எழுதுகிறேன்.
இந்தச் சிறப்பு அமர்வு, நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும். அனைவரையும் அரவணைத்துக்கொண்டு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறிச் செல்வதற்கான நமது கூட்டு உறுதியை மீண்டும் வலியுறுத்தும் தருணமாகவும் இது அமைகிறது. இந்த உணர்வுடனும் நோக்கத்துடனும் நான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். விண்வெளி முதல் விளையாட்டு வரை, முப்படை முதல் Start-ups வரை இந்தியாவின் மகள்கள் ஒவ்வொரு துறையிலும் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தங்கள் கடின உழைப்பு மற்றும் உறுதியின் மூலம், அவர்கள் தங்கள் திறன்களை நிரூபித்து வருகின்றனர்.
நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான விவகாரம் பல தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டில், அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, நாடாளுமன்றத்தில் மசோதாவிற்கு ஆதரவளிக்கப்பட்டது.
அது நமது ஒற்றுமையை வெளிப்படுத்திய ஒரு மறக்கமுடியாத தருணமாகும். நாட்டின் பெண்களுக்கு அளிக்கப்பட்ட ஓர் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், ஒரு முக்கிய முடிவு எவ்வாறு கூட்டாக எடுக்கப்பட்டது என்பதை ஒட்டுமொத்த உலகமும் கண்டுகளித்தது
இவ்வாறு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.