இந்தியா

‘சட்டவிரோத நடுவர் மன்றம்’: சிந்து நதி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நிராகரித்தது இந்தியா!

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவு தொடர்ந்து அமலில் உள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்தியா அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.

மேலும், 1960 ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிகளை மீறி உலக வங்கியால் இந்த நீதிமன்றம் “சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது” என்றும், அதன் தீர்ப்புகள் எதற்கும் சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்

ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி உலக வங்கியால் இந்த 'நடுவர் மன்றம்' அமைக்கப்பட்டது.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இந்த அமைப்பு இதற்கு முன் வெளியிட்ட அனைத்து அறிவிப்புகளையும் இந்தியா எவ்வாறு உறுதியாக நிராகரித்ததோ, அதேபோலவே தற்போதைய தீர்ப்பையும் இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது

இந்தியாவின் இறையாண்மை சார்ந்த முடிவுகள் குறித்துத் தீர்ப்பளிக்க இந்த 'நடுவர் மன்றத்திற்கு' எவ்வித அதிகார வரம்பும் இல்லை. இதன் தற்போதைய அல்லது எதிர்கால அறிவிப்புகள், இந்தியா மேற்கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. என இந்தியா தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் இடைநிறுத்தம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, எல்லையோரப் பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவைக் கண்டித்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை முற்றிலுமாக நிறுத்தும் வரை, இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளை நிறைவேற்ற இந்தியா கடமைப்படவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் சிந்து நதிநீர் தீர்ப்பாயத்தை நாடியது.

நடுவர் நீதிமன்றம் கூறியது என்ன?

பஹல்காம் தாக்குதலை காரணம் காட்டி சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதை ஏற்க முடியாது என நடுவர் நீதிமன்றம் தெரிவித்தது.

எந்த காரணத்தாலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதையோ அல்லது ரத்து செய்வதையோ நியாயப்படுத்த முடியாது என்று கூறிய நடுவர் நீதிமன்றம், இந்தியா ஒப்பந்தத்தின் கீழ் உள்ள தனது கடமைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

மேலும் மேற்கு நதிகளில், அதாவது ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியா கட்டி வரும் நீர்மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட வரம்பிற்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அணைக்கட்டுகளில் தண்ணீரைத் தேக்கி வைக்கும் இந்தியாவின் அதிகபட்ச கொள்ளளவு மற்றும் வடிவமைப்புகள் பாகிஸ்தானின் நீர் உரிமைகளைப் பாதிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.

2027 ஜூலையில் நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை

மேலும் இந்தியாவின் இந்தத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வுசெய்ய நிபுணர் குழு ஒன்றையும் நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டுள்ளது.

உலக வங்கியால் நியமிக்கப்படும் இந்த நடுநிலை நிபுணர் குழு, இந்தியாவின் இந்த நீர்மின் திட்டங்களின் தொழில்நுட்ப வடிவமைப்பு ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டுத்தான் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும்.

இந்த ஆய்வின் இறுதி அறிக்கை மற்றும் முடிவுகள் சூலை 2027-க்குள் வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எந்த மாற்றமும் இல்லை

தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, சிந்து நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்த இந்தியாவின் முடிவு தொடர்ந்து அமலில் இருக்கும் என இந்தியா தெரிவித்தது.

சிந்து நதிநீர் தீர்ப்பாயம்

சிந்து நதிநீர் தீர்ப்பாயம் என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 1960-ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்காக நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பாகும்.