IIT
இந்தியா

கேம்பஸ் இன்டர்வியூ: வேலைவாய்ப்புகளை வழங்க தவறிய 22 நிறுவனங்களுக்கு ஐ.ஐ.டி. தடை

கடந்த ஆண்டு இதேபோல் 10 நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை வழங்க தவறின.

பட்டம் பெறும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தவறிய 22 நிறுவனங்களுடன் 2 வளாக நேர்காணலுக்கு ஒத்துழைக்கமாட்டோம் என ஐ.ஐ.டி.க்கள் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றன.

உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பை நிறைவு செய்வதற்கு முன்பே வேலைவாய்ப்புகளை உறுதிசெய்யக்கூடிய ஒரு வழிதான் வளாக நேர்காணல். அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.க்களில் ஒவ்வொரு ஆண்டும் வளாக நேர்காணலில் வேலைவாய்ப்புகளை மாணவ- மாணவிகள் வாங்கி குவிப்பார்கள்.

அந்தவகையில் நடப்பாண்டில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு வளாக நேர்காணலில் வேலைவாய்ப்புகள் கிடைத்தன. அவ்வாறு வேலைவாய்ப்புகளை வழங்கிய நிறுவனங்களில் 22 நிறுவனங்கள் தாங்கள் வழங்கிய வேலைவாய்ப்புகளை வழங்க தவறியதாகவும், அந்த வகையில் 23 ஐ.ஐ.டி.க்களில் 150-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இதில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் நடந்த அனைத்து ஐ.ஐ.டி. வேலைவாய்ப்புக் குழுவின் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், அந்த கூட்டத்தில் வேலைவாய்ப்புகளை வழங்க தவறிய 22 நிறுவனங்களுடன் அடுத்த 2 வளாக நேர்காணலுக்கு ஒத்துழைப்பது இல்லை என முடிவெடுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

22 நிறுவனங்களுக்கு கடிதம்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட 22 நிறுவனங்களுக்கு வருகிற 30-ந்தேதிக்குள் அதிகாரப்பூர்வ கடிதம் ஐ.ஐ.டி. வேலைவாய்ப்புக்குழு வாயிலாக அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையை பொதுவாக 'கருப்பு பட்டியலில்' நிறுவனங்களை வைப்பதாகவே சொல்லப்படும். ஆனால் இந்த முறை 'ஒத்துழைப்பதில்லை' என முடிவெடுத்து அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இதேபோல், 10 நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை வழங்க தவறின. அந்த நிறுவனங்களுடன் அந்தந்த ஐ.ஐ.டி.க்கள் நேரடியாக பேசின. ஆனால் இந்த முறை அனைத்து ஐ.ஐ.டி. வேலைவாய்ப்புக்குழு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

SCROLL FOR NEXT