இந்தியாவின் உயர்கல்வி பட்ஜெட்டில் ஏறத்தாழ 50% நிதியானது ஐஐடி, ஐஐஎம் மற்றும் என்ஐடி போன்ற முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதாக கல்வி அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த உயர் நிறுவனங்களில் இந்தியாவின் மொத்த மாணவர்களில் சுமார் 3% (ஏறத்தாழ 60,000 இடங்கள்) மட்டுமே பயில்கின்றனர். ஆனால் பட்ஜெட்டில் பாதி நிதி இந்த 3% மாணவர்களுக்காக செலவிடப்படும் நிலையில், மீதமுள்ள 50% நிதியே நாட்டின் பிற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் 97% மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
உயர்கல்வியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் எண்ணிக்கையில் சுமார் 2.6% மட்டுமே இவை சேர்க்கின்றன. ஆனாலும் உயர்கல்விக்கு ஒதுக்கப்படும் மொத்த பொது நிதியில் 50%-க்கும் அதிகமானவற்றைப் பெறுகின்றன.
அதே வேளையில், கிட்டத்தட்ட 97 சதவீத மாணவர்களுக்குச் சேவை வழங்கும் 650-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், பாதிக்கும் குறைவான வளங்களைக் கொண்டே இயங்குகின்றன.
2026-27 பட்ஜெட்டில் உயர் கல்வித் துறைக்கு மட்டும் ரூ.55,727.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 11.28% அதிகமாகும்.
இதில் ஐஐடிக்கு ரூ. 12,123 கோடி, என்ஐடிக்கு ரூ.6,260 கோடி, ஐஐஎம்-க்கு ரூ.292 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்த 75-க்கும் மேற்பட்ட உயர்மட்ட நிறுவனங்கள் மட்டும் சுமார் ரூ.18,675 கோடிக்கு மேல் நிதியைப் பெறுகின்றன.
AISHE-இன் படி, இந்தியாவில் உள்ள சுமார் 1,338 பல்கலைக்கழகங்கள் மற்றும் 50,000-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பயிலும் 4.46 கோடி மாணவர்களில், 3.2 கோடி மாணவர்கள் மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளையே சார்ந்துள்ளனர்.
ஐஐடி, ஐஐஎம் மற்றும் என்ஐடி ஆகியவற்றில் 10 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி வசதிகள் மற்றும் உலகளாவிய பல்கலைக்கழக தரவரிசையில் இந்திய நிறுவனங்கள் இடம்பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த அதிகப்படியான நிதி அவற்றுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.