மும்பையில் உள்ள புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வந்த மாணவர் ஒருவர், தேர்வின் போது மொபைல் போனில் ChatGPT செயலியைப் பயன்படுத்தியதாகப் பிடிபட்டதைத் தொடர்ந்து, தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஐஐடி பவாய் வளாகத்தில் நேற்று இரவு முழுவதும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு விடிய விடிய தீவிர போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐஐடி பாம்பேயில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாமாண்டு பி.டெக் படித்து வந்த மாணவர் சாஹில் வாகோடே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருவத் தேர்வின் போது , சாஹில் தனது மொபைல் போனைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் தேர்வுத்தாளினைக் புகைப்படம் எடுத்து ChatGPT தளத்தில் பதிவேற்றி, அதற்கான விடைகளைத் தேடியதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேர்வு அறைக் கண்காணிப்பாளர் அவரிடமிருந்த மொபைல் போனைப் பறிமுதல் செய்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஐஐடி பாம்பே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாணவர் மீது உடனடி ஒழுங்குமுறை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
தேர்வு முடிந்ததும், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் ஆகியோர் மாணவரை அழைத்து ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் அவருடைய கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று கூறி அவரைத் தேற்றி அனுப்பியுள்ளனர்.
அதன் பின்னர் தனது விடுதி அறைக்குத் திரும்பிய மாணவர், மாலை நேரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது.
மாணவர் சாஹிலின் மரணச் செய்தி வெளியானதும், ஐஐடி வளாகத்தில் இருந்த மாணவர்கள் நள்ளிரவில் திரண்டு நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டத்தில் குதித்தனர்.
கல்லூரி நிர்வாகம் உண்மையை மறைப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சாஹிலுக்கு ஒரு வருடக் கல்வி இடைநீக்கம் வழங்கப்படும் என்றும், அவர் விடுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அதிகாரிகள் மிரட்டியதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இத்தகைய நடவடிக்கையால் நான்கு ஆண்டு பொறியியல் படிப்பு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என்ற பயமும், கடுமையான மன அழுத்தமுமே மாணவரை இந்த எல்லைக்குத் தள்ளியிருக்கலாம் என்று சக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, ஐஐடி பாம்பே இயக்குனர் பேராசிரியர் சிரீஷ் கேதாரே மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது நடந்து வரும் அனைத்து பருவத் தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஐஐடி பாம்பே வளாகத்தில் கடந்த 6 மாதங்களில் நடக்கும் 3-வது தற்கொலைச் சம்பவம் இதுவாகும் (இந்த ஆண்டில் 4-வது சம்பவம்). கடந்த பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களிலும் இரண்டு மாணவர்கள் இதேபோல் தற்கொலை செய்து கொண்டனர்.
தொடர்ந்து மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் ஐஐடி நிறுவனங்களில் நிலவும் கல்வி அழுத்தங்கள் மற்றும் மாணவர்களின் மனநலம் குறித்த பல்வேறு விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
இச்சம்பவம் குறித்து பவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.