இந்தியா

மனித மூளையைப் போலச் சிந்திக்கும் சூப்பர் கம்ப்யூட்டர் சிப்: ஐ.ஐ.டி. கவுகாத்தி விஞ்ஞானிகள் சாதனை

ஹைப்ரிட் பெரோவ்ஸ்கைட் செமிகண்டக்டர் மூலம் மனித மூளை போலச் செயல்படும் கம்ப்யூட்டர் சிப் வடிவமைப்பு

ஐ.ஐ.டி. கவுகாத்தி ஆராய்ச்சியாளர்கள், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் செல்கள் மற்றும் மனித மூளையைப் போலச் சிந்திக்கும் ஏ.ஐ. ஹார்டுவேர் நினைவக சாதனங்கள் ஆகிய இரண்டிற்கும் பயன்படக்கூடிய ஒரு புரட்சிகரமான புதிய செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

'பெரோவ்ஸ்கைட்' (Perovskite) என்ற அதிநவீன படிகப் பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பம், விண்வெளி செயற்கைக்கோள்கள் முதல் அதிவேக கம்ப்யூட்டர்கள் வரை அடுத்தகட்ட மாற்றத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக சோலார் பேனல்களில் ஏற்படும் ஆற்றல் இழப்பு மற்றும் வெயில், மழையினால் ஏற்படும் சிதைவுகளைத் தடுக்கப் பேராசியர் பரமேஸ்வர் கே. ஐயர் தலைமையிலான குழு ஒரு புதிய உத்தியைக் கையாண்டிருக்கிறது.

சோலார் செல்களுக்கு நடுவே மனித முடியை விட ஒரு லட்சம் மடங்கு மெல்லிய (10-15 நானோ மீட்டர்) இரண்டு கரிம மூலக்கூறு அடுக்குகளைப் பொருத்தியுள்ளனர். இந்த நுட்பம் மூலம் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திறன் 25.73% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது ஆய்வக சோதனைகளில் இது 26%-ஐயும் தாண்டியுள்ளது. கடுமையான வெப்பம் மற்றும் வெளிச்சத்திலும் கூட இந்த சோலார் செல்கள் தங்களின் ஆரம்பத் திறனில் 70% முதல் 90% வரை அப்படியே தக்கவைத்துக் கொள்கின்றன.

ஆராய்ச்சியாளர்கள் இதே பொருளைக் கொண்டு எதிர்கால சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கான 'மெமரி சாதனங்களையும்' (Memristor / R-RAM) உருவாக்கியுள்ளனர்.

மனித மூளையில் உள்ள நியூரான்கள் மற்றும் சினாப்சஸ்கள் தகவல்களைச் சேமிப்பது போல, மிகக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்திப் பல அடுக்குத் தகவல்களைச் சேமிக்கும் திறனை இது பெற்றுள்ளது.

இந்தச் சாதனத்தில் மின்சாரம் பாயும்போது ஏற்படும் சில தன்னிச்சையான மாற்றங்கள் மூலம், ஹேக் செய்ய முடியாத மிக பாதுகாப்பான ரகசிய குறியீடுகளை உருவாக்க முடியும். இது கிரிப்டோகிராஃபி மற்றும் தகவல் பாதுகாப்பிற்குப் பெரிதும் உதவும்.

ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பத்தை விண்வெளிப் பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்ல ஐஐடி குழு திட்டமிட்டுள்ளது. விண்வெளியில் உள்ள காஸ்மிக் கதிர்வீச்சுகளைத் தாங்கும் சக்தி இதற்கு இருப்பதால், எடை குறைந்த, வளைக்கக்கூடிய சோலார் பேனல்களாக மாற்றி செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி சாதனங்களுக்கு மின்சாரம் வழங்க இதைப் பயன்படுத்த முடியும்.

இந்தக் கண்டுபிடிப்புக்காக ஐஐடி கவுகாத்தி குழு பல காப்புரிமைகளைப் பதிவு செய்துள்ளதுடன், உலகப் புகழ்பெற்ற 'Advanced Functional Materials' இதழிலும் இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பத்தை, தற்போது ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து பெரிய அளவில் தயாரித்து வணிகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.