இந்தியா

நாட்டில் எல்லோருமே பத்திரிகையாளர் ஆக ஆரம்பித்துவிட்டால் அனைவருக்கும் பிரச்சனை தான் - உச்சநீதிமன்றம்

கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் ஒரு பத்திரிகையாளராக ஆக்குமா என்பதை விரிவாக ஆராய வேண்டும்.

நாட்டில் எல்லாருக்கும் பத்திரிகையாளர் ஆகத் தொடங்கிவிட்டால் அது எல்லோருக்குமே பிரச்சனைகளை உருவாக்கும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் செய்தி சேகரித்தபோது, ​​டெல்லி காவல்துறையினரால் தாக்குதலுக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளானதாகக் கூறப்படும் பெண் பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு கோரி மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

ரீல்ஸ் போடுபவர்

தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாமாலா பாக்சி அமர்வில் இந்தமனு மீதான நேற்றைய விசாரணையில் மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “தற்போதைய தொழில்நுட்பக் காலத்தில் மொபைல் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவருமே தங்களை பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்கிறார்கள்; இதில் யார் ரீல்ஸ் போடுபவர், யார் உண்மையான பத்திரிகையாளர் என்றே தெரியவில்லை” என தெரிவித்தார்.“

காவல்துறையினர் தங்களுக்கு எதிரான வழக்குகளைத் தாங்களே விசாரித்துக் கொள்ள முடியாது” என்று இந்திரா ஜெய்சிங் வாதாடினார்.

எல்லோருக்குமே பிரச்சனை

இதன்பின் பேசிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், "நாம் ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நாட்டில் எல்லாருக்கும் பத்திரிகையாளர் ஆகத் தொடங்கிவிட்டால் அது எல்லோருக்குமே பிரச்சனைகளை உருவாக்கும்" என தெரிவித்தார்.

நீதிபதி பாக்சி பேசுகையில், "கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் ஒரு பத்திரிகையாளராக ஆக்குமா என்பதை விரிவாக ஆராய வேண்டும். அது கடினமானது.

அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள், பதிவு செய்யப்பட்ட ஊடக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், அல்லது சுயாதீன பத்திரிகையாளர்கள், இன்புளுயன்ஸர்கள் அல்லது ரீல்ஸ் தயாரிப்பவர்களாக இருந்தாலும், அவர்களுக்குப் பல அடுக்கு பாதுகாப்பு உள்ளது,” என்றார்.

"பத்திரிகையாளர்களுக்கென ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்த இந்த விவகாரத்தை விரிவாக ஆராய வேண்டும்" என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.

மேலும் நீதிபதி பாக்சி, "பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சட்டம், பத்திரிகையாளர்களிடையே பிரிவுகளை உருவாக்குகிறது. நாம் இவை அனைத்தையும் ஆராய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

ஒருதலைப்பட்சம்

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், "தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்ப யுகத்தில், கைபேசி வைத்திருக்கும் எந்தவொரு நபரும் தன்னை ஒரு சுயாதீன அல்லது பகுதிநேர பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்ளலாம்.

ஆனால் உண்மையில் அவர், ஒருதலைப்பட்சமான கதைகளை முன்வைத்தோ அல்லது சம்பவங்களை பரபரப்பாக்கியோ பணம் சம்பாதிப்பதற்காக, சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்கு ரீல்களை மட்டுமே உருவாக்கிக் கொண்டிருப்பார்." என விமர்சித்தார்.

பெண் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படக்கூடாது என்ற வாதத்தை மேத்தா ஆதரித்தாலும், அதே கருணை பெண் காவலர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.

உத்தரவு

இதனிடையே இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழுவை அமைப்பது குறித்து பரிசீலிக்கவுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பத்திரிகையாளரைக் கைது செய்யவோ அல்லது அவர் மீது கடுமையான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவோ கூடாது என டெல்லி காவல்துறைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT