மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை அரசு ஏற்கத் தவறினால், பிரதமர் மோடியின் ராஜினாவைக் கோரும் நிலைக்கு போராட்டம் செல்லும் என கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் நடுவே பேசிய அவர்,.
“பிரதமர் மோடி அவர்களே, தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், இந்தப் பிரச்சனை தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுடன் மட்டும் நின்றுவிடாது; அது உங்கள் ராஜினாமாவைக் கோரும் நிலைக்குச் செல்லும்.
திறமையற்ற மற்றும் தோல்வியடைந்த ஒரு அமைச்சரை விட, இந்நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்கள் முக்கியமானவர்கள் அல்லவா? கோடிக்கணக்கான மாணவர்களை விடத் தோல்வியடைந்த, திறமையற்ற ஒரு அமைச்சருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்: இந்தியாவில் யாரும் உங்களுக்குத் தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள்.
அரசு தர்மேந்திர பிரதானை பாதுகாப்பது வெட்கக்கேடானது.” என தெரிவித்தார்.
டெல்லியில் சிஜேபி தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் இருந்து, பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்தார்.
ஆனால் சிஜேபி இந்த பேச்சுவார்த்தை கோரிக்கையை நிராகரித்துள்ளது. அரசு அலுவலங்களிலோ, அதிகாரிகள் இல்லங்களிலோ பேச்சுவார்த்தைக் கூடாது எனவும், பொதுவான ஒரு இடத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என சிஜேபியினர் தெரிவிக்கின்றனர்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி கட்சியினர் ஜூன்.20ம் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றனர்.