டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக நடைபெற்று வந்த மாணவர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்ற நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீதான வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடங்கும் என 'காக்ரோச் ஜனதா கட்சி (CJP)' மத்திய அரசுக்குக் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்களைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அபிஜீத் திப்கே தலைமையிலான காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.
கடந்த வார இறுதியில் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, மத்திய அரசுடன் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் நல்லெண்ண அடிப்படையில் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
போராட்டத்தைக் கைவிட்ட போதிலும், மத்திய அரசு மற்றும் காவல்துறை அளித்த வாக்குறுதிகளை மீறி வருவதாக CJP குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து, CJP செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, "போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எவ்வித காவல் துறை நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்ற ஒப்பந்தத்தை அரசு மீறியுள்ளது.
பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட உதவிகளைச் செய்த தன்னார்வலர்கள் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்.ஐ.ஆர் வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்ட மாணவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாஜக தலைவர்களான ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரை Tag செய்து வெளியிடப்பட்டுள்ள அந்தப் பதிவில், "நாளைக்குள் இது தொடர்பான எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை வழங்கி, வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால், நாங்கள் மீண்டும் போராட்டக்களத்தில் இறங்க வேண்டியிருக்கும்" எனத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லியில் ஜூலை 20 அன்று நடைபெற்ற 'சலோ சன்சாத்' பேரணியின் போது காவல்துறை நடத்திய கண்ணீர்ப்புகை தாக்குதல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்து தெரிவித்துள்ளது. "அமைதியான வழியில் போராட்டம் நடத்துவது என்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. வெறும் போராட்டம் நடக்கிறது என்பதற்காகக் காவல்துறையின் வரம்பு மீறிய தடியடியை நியாயப்படுத்த முடியாது"* என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை மற்றும் வழக்குகள் தொடரப்படும் விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்திச் முழக்கங்களை எழுப்பியதால் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.
மத்திய அரசு மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் காவல்துறையினர் நாளைக்குள் வழக்கு திரும்பப் பெறுதல் குறித்த தெளிவான முடிவை அறிவிக்காத பட்சத்தில், நாடு தழுவிய அளவில் மீண்டும் மாணவர் போராட்டம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.