இந்தியா

‘கணவர் இறந்துவிட்டால் மாமனாரிடம் ஜீவனாம்சம் பெற்றுக் கொள்ளலாம்’ - அலகாபாத் உயர் நீதிமன்றம்

கணவர் இறந்தாலும் மனைவியை பராமரிக்க வேண்டும் என்ற அவரது கடமை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்து சட்டப்படி, ஒரு கணவன் இறந்தபிறகும் தனது மனைவியை பராமரிக்க வேண்டும் என்ற அவனின் கடமை தொடர்வதால், அந்த பெண் தனது மாமனாரிடம் ஜீவனாம்சம் கோரலாம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் அரிந்தம் சின்ஹா ​​மற்றும் சத்ய வீர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, அகுல் ரஸ்தோகி என்ற நபர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து இந்த கருத்துகளை தெரிவித்துள்ளது.

இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்புச் சட்டம், 1956-ன் படி இந்த தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

கணவனை இழந்த ஒருப் பெண் தன்னைத்தானே பராமரித்து கொள்ளமுடியாத சூழலில் இருக்கும்போதும், கணவரின் சொத்துக்கள், பிள்ளைகள் மற்றும் அவர்களின் சொத்துகள், பெற்றோர் சொத்துகள் போன்ற முதன்மை ஆதராங்களில் இருந்து பராமரிப்பை பெறமுடியாத சூழலில், மாமனாருக்குக் குடும்பச் சொத்து மூலம் வருமானம் இருக்கும்போது அவரிடம் கோரலாம் என்பதை இச்சட்டம் வலியுறுத்துகிறது.

மருமகள் குடும்ப சொத்தில் தனக்குரிய பங்கை ஏற்கெனவே பெறாத பட்சத்தில் இந்த உரிமை செல்லுபடியாகும். மேலும் மாமனார் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த உரிமை உண்டு எனவும் குறிப்பிடப்படுகிறது.

ஆனால் அப்பெண் மறுமணம் செய்துகொண்டால், மாமனாரிடம் ஜீவனாம்சம் கோரும் இந்த உரிமை ரத்தாகிவிடும்.

அதே நேரத்தில், மற்றொரு வழக்கில் மருமகள் தனது மாமனார் மற்றும் மாமியாரைப் பராமரிக்க வேண்டிய சட்டபூர்வக் கடமை இல்லை என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.