ஆந்திர மாநிலம் போலவரம் மாவட்டம் சிந்தூர் அருகே கூடூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராம மக்கள் ஊருக்குள் ஐஸ்கிரீம் வாகனங்களுக்கு தடை விதித்துள்ளனர். இதற்காக கிராமத்தின் நுழைவு வாயிலில் பேனர் ஒன்றை வைத்துள்ளனர்.
பேனரில் சிலர் தாங்களாக ஐஸ்கிரீம் தயாரித்து வாகனங்களில் எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஐஸ்கிரீமில் எந்த பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்கு தெரியாது.
இதை சாப்பிடும் குழந்தைகளின் பல் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே குழந்தைகளின் நலனை கருதி ஐஸ்கிரீம் வாகனங்கள் கிராமத்திற்குள் நுழைய தடை விதித்து இருக்கிறோம்.
மேலும் இதனை மீறி கிராமத்திற்கு வரும் ஐஸ்கிரீம் வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதேபோல் இந்த கிராமத்தின் அருகே இருக்கும் மதுபான கடையை அப்புறப்படுத்தி விட்டனர்.
கிராம மக்களின் இந்த அசத்தல் முடிவு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.