இந்தியா

‘ஜூலை.20 வரை உயிருடன் இருப்பேன்... இல்லையென்றால் பேயாக திரும்பி வருவேன்’ - சோனம் வாங்சுக்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூலை.20 அன்று ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தவுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மத்திய அரசின் குளறுபடிகளை கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன்.28 முதல், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் இணைந்து சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

பல்வேறு தரப்பினரும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று டெல்லியில் திரண்டிருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சோனம் வாங்சுக், “உங்கள் அனைவருடனும் சேர்ந்து நாடாளுமன்றத்திற்குப் பேரணி செல்வதற்காக, ஜூலை 20 வரை நான் எப்படியாவது உயிரோடு இருப்பேன்.

அப்படி இல்லையெனில், அன்று நடத்தப்படும் நமது பேரணி வெற்றி பெறவில்லை என்றால், நான் ஒரு பேயாகத் திரும்பி வருவேன்," என தெரிவித்துள்ளார்.

9 கிலோ குறைந்த சோனம் வாங்சுக்

கடந்த 20 நாட்களாக சோனம் வாங்சுக் உணவு எடுத்துக் கொள்ளாததால், சுமார் 9.5 கிலோ வரை உடல் எடை குறைந்து, தற்போது 56.55 கிலோவாக உள்ளார் என நேற்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இந்த உண்ணாவிரதம் தொடர்ந்தால் அவரது முக்கிய உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை மத்திய அரசு தினந்தோறும் தீவிரமாகக் கண்காணித்து, தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.