இந்தியா

நான் ஒன்றும் டிராவல் ஏஜென்ட் கிடையாது: ராகுல் காந்தியின் வியட்நாம் பயணம் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு சசி தரூர் பதிலடி

ராகுல் காந்தி வெளிநாடு சென்றதை பாஜக பிரதான அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளது.

ராகுல் காந்தியின் வியட்நாம் பயணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நான் ஒன்றும் டிராவல் ஏஜென்ட் கிடையாது என சசி தரூர் எம்பி பதிலடி கொடுத்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியட்நாமிற்குச் சென்றுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சக நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஒற்றை வரியில் சுவாரஸ்யமாகப் பதிலளித்துள்ளார்.

தலைநகரில் முக்கியப் போராட்டங்கள் மற்றும் அரசியல் பரபரப்புகள் நிலவி வரும் வேளையில், ராகுல் காந்தி டெல்லியில் இல்லாதது குறித்து பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இது தொடர்பாகத் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குச் சற்றும் தயங்காமல் பதிலளித்த அவர், "நான் ஒன்றும் டிராவல் ஏஜென்ட் கிடையாது, என்னிடம் இதைக் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை" என்று கராறாகத் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு நபருக்கும் அவரவர் தனிப்பட்ட பொறுப்புகள் மற்றும் கடமைகள் இருப்பதாகவும், மற்றவர்களின் பயணத் திட்டங்கள் குறித்துத் தன்னால் எதையும் கூற இயலாது என்றும் அவர் வெளிப்படையாகக் கூறினார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நேரத்தில், ராகுல் காந்தி வெளிநாடு சென்றதை பாஜக பிரதான அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளது. தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் முக்கியப் போராட்டம் தீவிரமடைந்துள்ள வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் நாட்டின் தலைநகரில் இல்லாமல் வெளிநாட்டிற்குச் சென்றது குறித்து பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், சக கட்சித் தலைவரின் பயணம் குறித்த விவரங்களை விளக்க விரும்பாத சசி தரூர், தன் பங்குக்கு அந்த விவகாரத்திலிருந்து நழுவிக்கொண்டதுடன், இதுகுறித்த விவாதங்களை இரு கட்சிகளுமே பார்த்துக்கொள்ளட்டும் என்பது போலத் தனது பதிலைக் சுருக்கிக் கொண்டார்.

SCROLL FOR NEXT