இந்தியா

ஐதராபாத்: CEO போல் நடித்து தொழிலதிபரிடம் ரூ.2.7 கோடி மோசடி!

கணக்காளரின் போனை ஹேக் செய்து CEO போல பேசி ரூ.2.7 கோடியை சுருட்டிய கும்பல்.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேசுவது போல வாட்ஸ் ஆப்பில் மர்ம நபர்கள் ஏமாற்றியதை நம்பி, ஒரு சூப்பர் மார்க்கெட் நிறுவனம் ரூ.2.7 கோடி பணத்தை இழந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது.

ஒரு ஆபத்தான 'ஜிப்' ஃபைல் மூலம் கணக்காளரின் போன் மற்றும் கணினியை ஹேக் செய்து இந்த நூதன மோசடி நடத்தப்பட்டுள்ளது.

அலட்சியத்தால் தொடங்கிய ஆபத்து

ஐதராபாத் சைபர் க்ரைம் போலீசாரிடம் 36 வயது தொழிலதிபர் ஒருவர் அளித்துள்ள புகாரின்படி, இந்த மோசடி கணக்காளரின் வாட்ஸ்ஆப்பிற்கு வந்த ஒரு மெசேஜில் இருந்து தொடங்கியுள்ளது.

நிறுவனத்தின் மற்றொரு ஊழியரின் எண்ணில் இருந்து வந்த ஒரு 'ZIP' ஃபைலை கணக்காளர் திறந்துள்ளார். பின்னர் அதைத் தனது கணினியிலும் திறந்து பார்த்தபோது, அது ஒரு ஆபத்தான வைரஸ் ஃபைல் எனப் பாதுகாப்பு எச்சரிக்கை வந்துள்ளது.

ஆனால், அந்த கணக்காளர் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டு அதைத் தொடர்ந்து இயக்கியதால் கணினி முடங்கியது. அதன் பிறகு ஐடி பிரிவினர் அதைச் சரிசெய்து கொடுத்துள்ளனர்.

CEO போல வாட்ஸ்ஆப் ஆள்மாறாட்டம்

கணினி சரிசெய்யப்பட்ட பிறகு, கணக்காளர் தனது வாட்ஸ்ஆப்பில் சிஇஓ-வுடன் பேசிய பழைய உரையாடல்கள் அனைத்தும் மறைந்து போயிருப்பதைக் கண்டுள்ளார்.

அதற்குப் பதிலாக, சிஇஓ-வின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் ஒரு புதிய எண் அவதிப்பட்டிருந்தது. மர்ம நபர் பழைய உரையாடல்களின் சில விவரங்களை அனுப்பிப் பேசியதால், கணக்காளரும் அதை உண்மை என்று நம்பியுள்ளார்.

ரூ.2.7 கோடி அள்ளிய கும்பல்

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி, அந்த போலி சிஇஓ கணக்காளரைத் தொடர்பு கொண்டு அவசரமாக ரூ.30 லட்சம் பணத்தை ஒரு வங்கி கணக்கிற்கு அனுப்பும்படி கூறியுள்ளார். அதன் பின்னர் நிறுவனத்தின் மற்றொரு கணக்கில் ரூ.59 லட்சம் இருப்பதை அறிந்து, மேலும் ரூ.30 லட்சம் எனப் படிப்படியாகப் பணத்தைக் கேட்டுள்ளார்.

இப்படி அக்டோபர் 1 முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், அந்த கணக்காளர் மொத்தம் ரூ.2.7 கோடி பணத்தை மோசடி கும்பல் கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளுக்குத் டிரான்ஸ்ஃபர் செய்துள்ளார்.

இறுதியாக, அந்த கும்பல் மேலும் ரூ.50 லட்சம் கேட்டபோது சந்தேகம் அடைந்த கணக்காளர், அலுவலகத்தில் இருந்த உண்மையான சிஇஓ-விடம் நேரில் சென்று கேட்டபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ரூ.2.12 கோடியை இழந்த முதியவர்!

ஐதராபாத்தின் நாம்பள்ளியைச் சேர்ந்த 72 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி ரூ.2.12 கோடி பணத்தை இழந்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் போல மிரட்டிய மோசடி கும்பல், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் உங்களைக் கைது செய்யப் போகிறோம் எனப் பயமுறுத்தியுள்ளது. பயந்துபோன அந்த முதியவர் கடந்த செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை மொத்தம் 10 தவணைகளாகத் தனது பணத்தை மோசடி கும்பலின் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

இந்த இரு பெரும் சைபர் மோசடி சம்பவங்கள் குறித்து ஹைதராபாத் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்க்குகள் அல்லது ZIP ஃபைல்களைத் திறக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

SCROLL FOR NEXT