புனேவில் உள்ள குடியிருப்புப் பகுதியின் உயர்மட்ட மாடியில் இருந்து தனது ஆறு வயது சிறுவனுடன் கீழே குதித்து தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பிம்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு துயரச் சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வசிக்கும் குடியிருப்புப் பகுதியின் உயர்மட்ட மாடியில் இருந்து தனது ஆறு வயது சிறுவனுடன் கீழே குதித்து தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட உருக்கமான கடிதம் ஒன்று காவல்துறையினரின் விசாரணையில் முக்கியத் துப்பு துலக்க உதவியாக அமைந்துள்ளது.
புனேவின் புகழ்பெற்ற பிம்ரி-சிஞ்ச்வாட் பகுதியின் டங்கே சௌக் அருகே உள்ள உயர் குடியிருப்பு வளாகத்தில் நேற்று மாலை இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட மனோஜ் பாங்கட் என்பவரின் மனைவி 33 வயதுடைய ஐக்தா பாங்கட், தனது கணவர் மற்றும் ஆறு வயது மகனுடன் கடந்த 2 ஆண்டுகளாக அதே கட்டடத்தின் ஏழாவது மாடியில் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் புனே எரவடா பகுதியில் உள்ள முன்னணி ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மாலை சுமார் ஆறரை மணியளவில் ஐக்தா பாங்கட் தனது பிஞ்சு மகனை அழைத்துக் கொண்டு லிப்ட் மூலம் கட்டடத்தின் 18-வது மாடிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள திறந்தவெளிப் பகுதிக்குச் சென்று இருவரும் கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது. திடீரென சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து பார்த்தபோது, தாயும் மகனும் கட்டடத்தின் உள்பகுதி குழாய் வழிப் பகுதியில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர். உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெண்ணின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட பல பக்கங்கள் கொண்ட கடிதம் காவல்துறையினரை உலுக்கியுள்ளது. அந்த மரணக் குறிப்பில், தான் பல ஆண்டுகளாக முதுகுத் தண்டுவடம் தொடர்பான கடுமையான நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதிலிருந்து மீள முடியாத விரக்தியில் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் இல்லாத உலகில் தன் மகனைத் கவனிக்க ஆளில்லை என்றும், அவனும் தன்னைப் பிரிந்து வருந்தக் கூடும் என்பதால் அவனையும் தன்னுடன் அழைத்துச் செல்வதாகவும் அந்தத் தாய் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தன் மறைவுக்குப் பிறகு கணவர் மன அமைதியுடன் வாழ்வதற்குக் காலம் தாழ்த்தாமல் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அந்த இறுதி மடலில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிஞ்ச்வாட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.