வேலையின்மையைக் காரணம் காட்டி ஒருவர் தந்தை என்ற பொறுப்பிலிருந்து பின்வாங்கமுடியாது என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தனது பிள்ளைகளுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து புல்தானா பகுதியைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
தனது 10 மற்றும் 7 வயதுடைய மகன் மற்றும் மகளுக்கு தலா ரூ.4,000 வீதம், மாதந்தோறும் மொத்தம் ரூ.8,000 பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும் என கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தனக்கு தற்போது வேலை இல்லை என்றும், தனது ஒரே வருமான ஆதாரமாக இருந்த ஆட்டோ ரிக்ஷாவையும் விற்றுவிட்டதால் இந்தத் தொகையை செலுத்த முடியாது என்றும் உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம்,
பிள்ளைகளை வளர்ப்பதும், அவர்களுக்கு நிதியுதவி அளிப்பதும் தந்தையின் சட்டப்பூர்வ மற்றும் தனிப்பட்ட கடமை எனவும், பெற்றோரின் பிரச்னைகளுக்கு மத்தியில், வளரும் வயதில் இருக்கும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும், அவர்களின் அத்தியாவசியத் தேவைகளையும் புறக்கணிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து, வேலையின்மை அல்லது குறைந்த வருமானம் என்பதைக் காட்டி பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பில் இருந்து தந்தை பின்வாங்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.