Bihar
இந்தியா

குழந்தைகள் கண் முன்னே மனைவியை சுட்டுக் கொலை - கணவரின் வெறிச்செயல்!

இதில் குண்டு பாய்ந்து ஷாலினி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

பீகார் மாநிலம் பூர்னியா பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக, பள்ளி ஆசிரியை ஒருவர் அவரது குழந்தைகளின் கண் முன்னாலேயே கணவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நில முதலீட்டுத் தகராறு:

பூர்னியா பகுதியைச் சேர்ந்த ராஜ் குமார் யாதவ் அங்குள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷாலினி (34), அப்பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து கூட்டாக நிலம் ஒன்று வாங்கியுள்ளனர். அந்த நிலத்தில் தான் முதலீடு செய்த பணத்தைத் திருப்பித் தருமாறு ராஜ் குமார் தனது மனைவியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால், தன்னால் பணம் தர முடியாது என்று ஷாலினி மறுத்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

குழந்தைகள் முன்னே தாக்குதல்:

சம்பவத்தன்று மாலை இருவருக்கும் இடையிலான தகராறு முற்றவே, ராஜ் குமார் தனது மகன்களின் கண் முன்னால் ஷாலினியை கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

பின்னர் ஆத்திரத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய அவர், இரவு 8 மணியளவில் மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு:

இரவு கணவர் வீடு திரும்புகையில், வீட்டில் குழந்தைகள் படித்துக் கொண்டும், மனைவி ஷாலினி சமையல் செய்துகொண்டும் இருந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக ராஜ் குமார் தனது துப்பாக்கியை எடுத்து, மகனின் கண் முன்னே ஷாலினியை நோக்கிச் சுட்டார்.

இதில் குண்டு பாய்ந்து ஷாலினி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப் பார்த்த குழந்தைகள் அலறித் துடித்த நிலையில், ராஜ் குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

வீடியோ காலில் மரண வாக்குமூலம்:

பயந்துபோன மூத்த மகன், உடனடியாகத் தனது மாமா விக்ரம் ஆனந்திற்கு செல்போனில் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷாலினி, தனது சகோதரனிடம் "இப்போது நாம் என்ன செய்வோம்? அவர் என்னைச் சுட்டுவிட்டார்" என்று முனகியபடியே பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பதறியடித்து வந்த உறவினர்கள், ஷாலினியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய ராஜ் குமாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.