இந்தியா

நீண்ட நேரம் செல்போனில் பேசிய பெண் கொலை - சந்தேகத்தில் கணவர் வெறிச்செயல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் சந்தியா ராணி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி அடுத்த அங்கலக்குடுருவை சேர்ந்தவர் நரேந்திர பாபு. இவரது மனைவி சந்தியா ராணி (வயது 27). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். நரேந்திர பாபு செஞ்சு பேட்டையில் அடகு கடை நடத்தி வந்தார்.

தகராறு

நரேந்திர பாபு மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் பணம் கொடுப்பதில்லை. மாறாக மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் சந்தியா ராணி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார்.

மாமியார் வீட்டிற்கு சென்ற நரேந்திர பாபு இனி மனைவியிடம் தகராறு செய்ய மாட்டேன் என பெரியவர்கள் முன்னிலையில் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.

சந்தேகம்

கணவர் வீட்டுக்கு வந்த சந்தியா ராணி செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்தார். இதனால் நரேந்திர பாபுவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி பெரிய கத்தியை வாங்கி வந்து வீட்டில் மறைத்து வைத்து இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த நரேந்திர பாபு மனைவியிடம் யாருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டு இருக்கிறாய் என கேட்டார்.

கொலை

மேலும் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக வெட்டினார். தன்னை கொலை செய்ய வேண்டாம் என மனைவி கெஞ்சியும் ஈவு இரக்கம் இன்றி வெட்டி கொலை செய்தார். பின்னர் போலீசில் சரணடைந்தார்.

போலீசார் நரேந்திர பாபுவை கைது செய்தனர். கொலை நடந்த அன்று காலை சந்தியா ராணி தனது பெற்றோருக்கு வீடியோ கால் செய்து கணவரின் நடத்தை மாறவில்லை. அவர் என்னை கொலை செய்து விடுவாரோ என்று பயமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

அவர் பயந்தபடியே அன்று இரவே அவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT