இந்தியாவில் திருமணம் என்பது குடும்ப பெயரை மாற்றுவது அல்லது புதிய வீட்டிற்கு குடிபெயர்வதை விட, பெண்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி தெரிவித்தார்.
திருமணத்திற்கு பிறகு இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் பெற்றொர் வீட்டை விட்டு வெளியேறும்போது, அவர்கள் எவற்றையெல்லாம் கடந்து செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
கிரண் பேடி ஒரு முன்னாள் டென்னிஸ் வீராங்கனையும் மற்றும் 1972-ல் ஐபிஎஸ்-இல் சேர்ந்த முதல் இந்தியப் பெண் அதிகாரி ஆவார்.
அவர் மே 28, 2016 முதல் பிப்ரவரி 16, 2021 வரை புதுச்சேரியின் 24-வது துணைநிலை ஆளுநராகப் பணியாற்றினார்.
இந்த நிலையில் இந்திய பெண்களின் திருமண வாழ்க்கை குறித்து ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவர் தனியார் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
“இந்திய பெண்களுக்கு திருமணம் என்பது ஒரு மன உளைச்சலாக உள்ளது. ஒரு பெண் தனக்கு நன்கு அறிமுகமான மனிதர்கள், அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் உறவுகளை கொண்ட தங்கள் வீட்டை பிரிந்து செல்லும் சூழல் ஏற்படுகின்றது.
அப்போது அவர்கள் மற்றொரு குடும்பத்தில் விரைவாக இணைந்து, அந்த குடும்பத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பெண்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
பெண்கள் தங்களின் திருமணத்திற்கு பிறகு, புதிய உறவுகளை ஆரம்பத்தில் இருந்து கட்டியெழுப்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
தனது மாமியாரை அழைப்பது போன்ற ஒரு சிறிய விஷயம் கூட, பெண்களை உணர்ச்சி ரீதியில் மிகவும் பாதிக்கிறது.
ஒரு பெண் தன் கணவனின் குடும்பம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவர்களை தன் சொந்த குடும்பமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவள் மீது எதிர்ப்பார்ப்பு அதிகாக இருக்கிறது.
அதற்காக அந்த பெண் சில கஷ்டங்களையும் அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறாள்.
பெண்களின் வாழ்க்கையில் இல்லறம் என்பது சம்பளமே இல்லாத வேலையை உள்ளடக்கியதாக உள்ளது.
ஒரு திருமணத்தின் போது ஊர்வலம் மிகுந்த ஆடம்பரத்துடனும் கோலாகலத்துடனும் மணமகள் அழகாக இருக்கிறாள். ஆனால் திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் தனது பாதுகாப்பான, அன்பான, ஆதரவான வீட்டை விட்டுப் பிரிந்து செல்லும்போது அது ஒரு மன உளைச்சலாக மாறுகிறது.
பல வீடுகளில் பெண்கள் உணவு சமைத்தல், பொருட்களை சுத்தம் செய்தல், குடும்பத்திற்கான பொருட்களை வாங்குதல், குழந்தைகளின் தேவைகள், குடும்ப நிகழ்வுகள் மற்றும் வீட்டை சீராக இயங்க வைக்கும் அன்றாட நிகழ்வுகளை கவனித்து கொள்பவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.
ஒரு பெண், திருமணத்திற்குப் பிறகும் தான் தொடர்ந்து வேலை செய்வேன் என்றும், வீட்டு வேலைக்கு ஒருவரை அமர்த்திக்கொள்வேன் என்றும், இருவரும் சேர்ந்து குடும்பத்தை நடத்த முடியும் என்றும் கூற வேண்டும். அப்போதுதான் அப்பெண் தனது வேலையை விட வேண்டிய அவசியம் ஏற்படாது.
ஆண்கள் தங்கள் வேலையை விட வேண்டியதில்லை, ஆனால் பெண்கள் அவ்வாறு செய்ய வேண்டும் என்றும், பல நேரங்களில் அது அவர்களுக்கு நிர்பந்தமாக உள்ளது.
கணவர்கள் ஆதரவாக இல்லை என்று பெண்கள் உணர்ந்தால், திருமணத்திற்குப் பிறகு அவர்கள் தங்கள் பெற்றோருடன் வாழ்வதற்குத் தேவையான தைரியமும் பொருளாதாரச் சுதந்திரமும் அவர்களிடம் இருக்க வேண்டும்.
திருமணத்திற்குப் பிறகு பெற்றோரைப் பராமரிப்பதற்காக அவர்களுடன் தங்க விரும்பும் ஒரு பெண்ணை தாழ்வாகக் கருதக்கூடாது, மாறாக அது கொண்டாடப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.