இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து மாற்று எரிபொருள் மற்றும் மின்சார வாகனங்களை நோக்கிய பயணம் ஆகஸ்ட் 2026-ல் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்திய ஆட்டோ மொபைல் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள புதிய தரவுகளின்படி, பயணிகள் வாகனங்கள் பிரிவில் முதன்முறையாக பெட்ரோல் வாகனங்களின் எண்ணிக்கையை (40.85 சதவீதம்) காட்டிலும், மாற்று எரி பொருள் வாகனங்களின் எண்ணிக்கை 41.95 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
இந்த மாற்று எரிபொருள் பிரிவில் மின்சார வாகனங்கள், சி.என்.ஜி., ஹைப்ரிட் மற்றும் எல்.பி.ஜி. ஆகிய அனைத்தும் இணைந்து பங்களித்து உள்ளன.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் இன்னும் பெருமளவில் சந்தையைக் கட்டுப்படுத்தி வந்தாலும், அவற்றின் ஆதிக்கம் கணிசமாகக் குறைந்து வருகிறது.
ஜனவரி முதல் ஆகஸ்ட் 2026 வரை பதிவான மொத்த 82 லட்சம் வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் எண்ணிக்கை 83.5 சதவீதம் ஆகும்.
இது 2021-ம் ஆண்டின் இதே காலத்தில் இருந்த 95 சதவீதம் என்ற அளவிலிருந்து (57 லட்சம் வாகனங்களில்) 11.5 சதவீதம் புள்ளிகள் சரிவைக் காட்டுகிறது.
மொத்த வாகனப் பதிவில் மின்சார வாகனங்களின் பங்கு 10.6 சதவீதமாக உயர்ந்திருந்தாலும், இந்த வளர்ச்சி அனைத்துப் பிரிவுகளிலும் சீராக இல்லை.
'வாஹன்' தளத்தின் தரவுகளை பகுப்பாய்வு செய்கையில், மின்சார வாகனங்களின் பயன்பாடு முக்கியமாக இருசக்கர மற்றும் 3 சக்கர வாகனப் பிரிவுகளிலேயே அதிகளவில் சாத்திய மாகியுள்ளது என்பது தெரியவருகிறது.
நாட்டின் மொத்த புதிய வாகனப் பதிவில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள இருசக்கர வாகனப் பிரிவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு வேகமெடுத்து உள்ளது.
இருசக்கர வாகனப் பதிவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 2025-ல் 6.4 சதவீதத்தில் இருந்து, 2026 ஆகஸ்ட் வரை 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, வரலாற்று ரீதியாக முதன்முறையாக பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களின் பங்கு 90 சதவீதம் என்ற அளவுக்குக் கீழ் குறைந்துள்ளது.
அதேபோல், மாற்று எரிபொருளுக்கு அதிவேகமாக மாறிய ஒரே பிரிவு 3 சக்கர வாகனங்கள் ஆகும். 2026 ஆகஸ்ட் வரை பதிவான சுமார் 9.8 லட்சம் 3 சக்கர வாகனங்களில் 60.5 சதவீதம் மின்சார வாகனங்கள் ஆகும்.
2021-ல் 30 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் 3 சக்கர வாகனங்களின் பதிவு 2026-ல் 15 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்துள்ளது.
பயணிகள் கார்கள் பிரிவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பங்கு 2021-ல் இருந்த 86 சதவீதத்தில் இருந்து 2026-ல் 61.6 சதவீதமாக குறைந்துள்ளது.
ஆனால், இந்தச் சரிவுக்கு மின்சார கார்களை விட சி.என்.ஜி. அல்லது எல்.பி.ஜி-யில் இயங்கும் கார்களின் அதிகரிப்பே முக்கியக் காரணமாகும். ஹைப்ரிட் கார்களின் விற்பனையில் முன்னேற்றம் இருந்தாலும், 2023 முதல் அதன் பங்கு சுமார் 8 சதவீதம் என்ற அளவிலேயே நிலையாக உள்ளது.
கார்கள் பிரிவிலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்த சார்ஜிங் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல் போன்ற மேலதிக கொள்கை சார்ந்த மற்றும் உள்கட்டமைப்பு நடவடிக் கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்பதை இந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.