இந்தியா

கேரளா: கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் மழையால் இடிந்து விழுந்த 100 ஆண்டு பழமையான கடிகார கோபுரம்!

பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்த 25 மீட்டர் உயர கடிகார கோபுரம்..

கேரள மாநிலத்தின் மிக முக்கியமான ரெயில் நிலையங்களில் ஒன்றான கோழிக்கோடு ரெயில் நிலையத்தில், இன்று காலை 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடிகார கோபுரம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்தது எப்படி?

கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் இந்திய ரெயில்வேயின் 'அமிர்த பாரத் ரெயில் நிலைய திட்டத்தின்' கீழ் மறுசீரமைப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாகவும், பழமையான கட்டிடம் என்பதனாலும் இந்த கடிகார கோபுரத்தில் ஏற்கனவே சில விரிசல்கள் காணப்பட்டன.

இன்று காலை சுமார் 11:10 மணியளவில், இந்த 20 முதல் 25 மீட்டர் உயரமுள்ள கடிகார கோபுரத்தின் ஒரு பெரிய பகுதி, பயங்கர சத்தத்துடன் 2-வது நடைமேடை மற்றும் 3-வது தண்டவாளப் பகுதி மீது சரிந்து விழுந்தது.

தவிர்க்கப்பட்ட பெரும் அசம்பாவிதம்..

இந்த கடிகார கோபுரம் ஆபத்தான நிலையில் இருந்ததால், அதனைப் பாதுகாப்பாக இடித்து அகற்றுவதற்கு ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் பயணிகள் நடமாட்டம் இல்லாதவாறு முன்கூட்டியே தடுப்புகள் அமைத்துக் கண்காணிக்கப்பட்டு வந்தது.

மேலும், விபத்து நடப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்புதான் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அந்தப் பகுதியை ஆய்வு செய்ய வந்திருந்தனர். கோபுரம் இடிவதைக் கவனித்த அவர்கள் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பாக விலகியதாலும், பயணிகள் யாரும் நேரடியாக அதன் கீழ் இல்லாததாலும் ஒரு பெரும் உயிர்ச்சேதம் மற்றும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ரெயில் சேவைகளில் பாதிப்பு..

இடிபாடுகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் தண்டவாளத்தின் மீது விழுந்ததால், கோழிக்கோடு மார்க்கமாகச் செல்லும் சில ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

சம்பவ இடத்திற்கு விரைந்த பாலக்காடு கோட்ட ரெயில்வே மேலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் இடிபாடுகளை அகற்ற உத்திரவிட்டனர்.