இந்தியா

இமாச்சல் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 7 பேர் உயிரிழப்பு

பலத்த காயம் அடைந்த 6 பேர் சம்பாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள மலைப்பாதையில் தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

பேருந்து கவிழ்ந்து விபத்து

குறுகிய பாதை மற்றும் செங்குத்தான சரிவுகளுக்கு பெயர் பெற்ற சுரா பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சலூச்மோர் வளைவு அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்து கவிழ்ந்தது. காலை 7.15 மணியளவில் இந்த விபத்து நடந்தது.

பேருந்தில் இருந்த பயணிகள் அலறினார்கள். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் உதவிக்கு ஓடி வந்தார்கள். தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை, ஊர்க் காவல் படை, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

7 பேர் பலி

பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர். பலத்த காயம் அடைந்த 6 பேர் சம்பாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பேருந்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. பேருந்து இடிபாடுகளுக்கு அடியில் பயணிகள் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுவரை 78 பேர் பலி

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஜூன் 30-ந்தேதி முதல் நேற்று வரை பருவ மழைக்காலத்தில் சாலை விபத்தில் 78 பேர் பலியாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி இரங்கல்

இமாச்சல் பேருந்து விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பேருந்து விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது.