இமாச்சல பிரதேசத்தில் உள்ள முதியோர் ஆசிரமம் ஒன்றில், இரண்டு குடும்பங்களால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், தங்களின் வாழ்க்கையின் இறுதியில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
இமாச்சலில் துனாக் கிராமத்தை சேர்ந்த 75 வயதான கன்ஹையா லால், தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2022 இல், அவரின் மனைவி இறப்பிற்கு பிறகு தனது சொத்துக்களை உடன்பிறந்த சகோதரர்களுக்கு மாற்றி கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சிறிது காலத்திற்கு பிறகு முதியவரின் உறவினர்கள் மற்றும் அவரின் பிள்ளைகள் அவரை கைவிட்டதை தொடர்ந்து, அவர் தனது வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த காலகட்டத்தில் முதியவர் தங்குவதற்கு இருப்பிடம் இல்லாததால், அவர் மலையில் உள்ள ஒரு குகையில் வாழ்ந்து வந்துள்ளார்.
இதையடுத்து ‘அப்னா கர்’ என்ற முதியோர் இல்லத்தை சேர்ந்த தன்னார்வலர்கள், முதியவரை குகையில் இருந்து மீட்டனர்.
இந்த முதியோர் இல்லமானது சுமார் 25 கைவிடப்பட்ட நபர்களை வைத்து ஆதரவளித்து பராமரித்து வருகிறது.
இதேபோன்று, மேற்கு வங்கத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு தனது குடும்பத்தால் கைவிடப்பட்டு, இமாச்சலுக்கு வந்த 63 வயதான சபினா என்பவரையும் தன்னார்வலர்கள் மீட்டனர்.
இதையடுத்து தங்களின் பிள்ளைகளால் கைவிடப்பட்டு, முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வந்த இருவருக்கும் இடையே ஒரு நட்பு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தங்களின் முதிர்வயதில், ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும், துணையாகவும் இருக்கும் வகையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
இவர்கள் இருவருக்கும் முதியோர் இல்லத்தின் நிறுவனர் பிரகாஷ் சந்த் மற்றும் மாவட்ட நல அலுவலர் ரமேஷ் பன்சால் ஆகியோர் திருமணம் செய்து வைத்தனர்.
இந்த திருமணம் குறித்து மாவட்ட நல அலுவலர் கூறுகையில், தங்களின் முதிர்வயதில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட இரண்டு பெற்றோர்கள், தற்போது மீண்டும் ஒரு புதிய உறவில் இணைந்திருப்பதாக தெரிவித்தார்.
குடும்பங்களால் கைவிடப்பட்ட இவர்களுக்கு, இந்த முதியோர் இல்லமும், சமூகமும் ஆதரவளித்து, அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க உதவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பெற்றோர்கள் தங்களின் முதிர்வயதில் பிள்ளைகளிடம் சொத்துகளை பறிகொடுத்து, பின்னர் கைவிடப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் தங்களுக்கு ஆதரவாக ஒரு துணையை தேந்தெடுத்து தங்களது இறுதி காலத்தை மகிழ்ச்சியுடன் வாழ உள்ளனர்.