இந்தியா

இந்தியாவில் வெப்ப அலை - எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

வெப்ப அலை காரணமாக கடந்த 2 நாட்களில் மட்டும் தெலுங்கானா மாநிலத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோடை வெயிலின் தாக்கம் இந்தியா முழுவதும் கொடுரமாக இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் வடமாநிலங்களில் வெப்ப அலையின் கொடூர முகத்தினால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி போய் இருக்கின்றனர்.

வெப்ப அலையின் தாக்கத்தால் உயிரிழப்புகளும் இந்தியாவில் ஏற்பட்டு உள்ளன.

தெலுங்கானாவில் 51 பேர் பலி

வெப்ப அலை காரணமாக கடந்த 2 நாட்களில் மட்டும் தெலுங்கானா மாநிலத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே முடிந்தவரை பயணங்களை தவிர்க்க வேண்டும். என்றும் யாரும் வீடுகளை விட்டு வெளியே அவசியமின்றி வர வேண்டாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மேலும் வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என்றும், வெப்ப அலையால் பாதிப்பு தொடரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி, அடுத்த ஒரு வாரத்துக்கு வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் கடுமையான வெப்ப அலை தொடரும் என்றும், பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 5 வட மாநிலங்களில் வெப்ப அலை மற்றும் மிக கடுமையான வெப்ப அலை வருகிற 29-ந்தேதி வரை நீடிக்கும் என்றும் ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.

அதிலும் மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா பகுதிகளில் கடுமையான வெப்ப அலைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டிருக்கிறது. இங்கு வெப்பநிலை 113 டிகிரி (45 செல்சியஸ்) முதல் 116 டிகிரி (47 செல்சியஸ்) வரை பதிவாகக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கலந்த அசவுகரியமான வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் வெப்ப அலை இருக்கும் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மழைக்கு வாய்ப்பு

அதன்படி, இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்கு றிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழையும், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், நாளை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், காற்றுடன் கனமழையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.