கன்வர் யாத்திரை நிறைவடைந்ததை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதிக் கரைகளில் இருந்து சுமார் 7,000 டன்னுக்கு மேற்பட்ட கழிவுகள் அகற்றுப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு கன்வர் யாத்திரையில் கங்கை தீர்த்தம் சேகரிப்பதற்காகச் சுமார் 5 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் ஹரித்வாருக்கு வருகை தந்தனர்.
யாத்திரை முடிந்த நிலையில், புனிதமாகக் கருதப்படும் 'ஹர் கி பௌரி' உட்பட 100க்கும் மேற்பட்ட கங்கைக் கரைகளில் டன்கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள், ஆடைகள் சிதறிக் கிடக்கின்றன.
குறிப்பாக, கரைகளில் உள்ள உடை மாற்றும் அறைகளில் பக்தர்கள் சிறுநீர் நிரப்பப்பட்ட லட்சக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்களை அப்படியே போட்டுவிட்டுச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுக்கழிப்பிட வசதிகள் குறைவால் பக்தர்கள் பாட்டில்களில் இவ்வாறு பாட்டில்களில் சிறுநீர் கழிகின்றன .
புனித நதியை வழிபட வந்துவிட்டு, அதே நதியையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இந்த அளவிற்கு மாசடையச் செய்து சென்ற பக்தர்களின் போக்கிற்குப் உள்ளூர் வாசிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
மாஸ்க் அல்லது கையுறைகள் போன்ற எவ்வித அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, தூய்மைப் பணியாளர்கள் சிறுநீர் பாட்டில்கள் மற்றும் கழிவுகளை மண்வாரிகளைக் கொண்டு அகற்றும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மாநகராட்சி ஆணையர் நந்தன் குமார் தலைமையிலான தூய்மைப் பணியாளர்கள் குழு இரவு முழுதும் பணியாற்றி, இதுவரை சுமார் 7,000 டன் கழிவுகளைக் குப்பை சேகரிப்பு மையங்களுக்கு அனுப்பியுள்ளது.
ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் மட்டுமல்லாது, கங்கை நதி உற்பத்தியாகும் இமயமலைப் பகுதியான கங்கோத்ரியிலும் இதே போன்ற சூழலே நிலவுகிறது.
பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்ட கங்கோத்ரிக்கு இந்த ஆண்டு ஆன்மீக பயணமாக சுமார் 57,000 பக்தர்கள் வருகை தந்தனர்.
இமயமலை சூழலியல் மண்டலத்தில் பக்தர்கள் பெருமளவில் குப்பைகளைக் கொட்டிச் சென்றுள்ளதால் அரிய வகை உயிரினங்களுக்கும் வனப்பகுதிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
யாத்திரைக்குப் பிறகு வனத்துறை நடத்திய சிறப்புத் தூய்மை முகாமில் மட்டும் 57 மூட்டைகள் கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
கன்வர் யாத்திரை என்பது வட இந்தியாவில் ஆண்டுதோறும் சிராவண (ஆடி) மாதத்தில் சிவபெருமானை வேண்டி சிவபக்தர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு முக்கியமான பாதயாத்திரையாகும்.
இவர்கள் ஹரித்வார், கங்கோத்ரி போன்ற புனிதத் தலங்களுக்கு சென்று கங்கை நீரைச் சேகரித்து, அதனைத் தங்களது தோள்களில் கன்வர் என்ற காவடி போன்ற அமைப்பில் சுமந்து கொண்டு பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து வந்து உள்ளூர் சிவன் கோயில்களில் உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர்.