இந்தியா

'ஹர் கர் திரங்கா' இயக்கம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

'ஹர் கர் திரங்கா' பிரசாரம் 'வந்தே மாதரம்' பாடலுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெறும் ‘ஹர் கர் திரங்கா’ (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி) இயக்கத்தில் பொதுமக்கள் அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி பதிவு

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "நம் நாட்டின் மூவர்ணக் கொடி நமது பெருமையின் அடையாளம். தேசத்திற்காக எப்போதும் நமது சிறந்த பங்களிப்பை வழங்க அது நமக்கு ஊக்கமளிக்கிறது. அனைத்து குடிமக்களும் #HarGharTiranga இயக்கத்தில் பெருமளவில் பங்கேற்று, 'வளர்ச்சியடைந்த பாரதம்' (Viksit Bharat) படைப்பதற்கான கூட்டு திட்டத்தை புதுப்பிக்க வேண்டும்."

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு சிறப்பு

தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ உருவாக்கப்பட்டதன் 150-வது ஆண்டை நாடு கொண்டாடும் இந்த வேளையில், இந்த ஆண்டுக்கான 'ஹர் கர் திரங்கா' பிரசாரம் 'வந்தே மாதரம்' பாடலுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரசாரத்தின் முக்கிய அம்சங்கள்

நேற்று முதல் 17 வரை நாடு முழுவதும் 'திரங்கா யாத்திரை', பேரணிகள், இசைக்கச்சேரிகள் மற்றும் வந்தே மாதரம் கூட்டுப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் தேசியக் கொடியுடன் தங்களது சுயபடம் எடுத்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.