இந்திரா காந்தியின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் அவரின் நினைவை போற்றி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது நினைவை போற்றி வருகின்றனர்.
அந்த வகையில் அவரின் பேத்தியும் வயநாடு காங்கிரஸ் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் சிறு வயதில் தான் பாட்டியுடன் விளையாடும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், 'பிறந்தநாள் வாழ்த்துக்கள், புலியே! உங்களைப் போல் எப்போதும் யாரும் வர இருக்க முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவரும், பிரியங்கா காந்தியின் தாயும், இந்திரா காந்தியின் மருமகளுமான சோனியா காந்தி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடமான 'சக்தி ஸ்தலத்திற்கு' சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தார். காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவும் உடன் இருந்தார்.
இதனிடையே இந்திரா காந்தியின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் விதமாக சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உரையாடும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் சோனியா காந்தி, இந்திரா காந்தியை சந்தித்த தருணம் குறித்து விவரித்துள்ளார். இந்த வீடியோவை ராகுல் காந்தியும் தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மல்லிகார்ஜுன் கார்கே, தன் எக்ஸ் பதிவில், "இந்தியாவின் 'இரும்புப் பெண்மணி'க்கு நூற்றுக்கணக்கான வணக்கங்கள். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க அவர் தன் உயிரைத் தியாகம் செய்தார்.
தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பு, அவரது பங்களிப்புகள், அவரது மன உறுதி மற்றும் அவரது தீர்க்கமான தலைமைத்துவம் ஆகியவை என்றென்றும் எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியும், "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி" என ஒரே வரியில் தன் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.