கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ரிச்சர்ட்ஸ் டவுன் பாட்டரி சாலையில் இயங்கி வரும் புகழ்பெற்ற கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் திடீரென காய்ச்சல் மற்றும் இருமல் தீவிரமாக பரவியுள்ளது. பள்ளியில் பயிலும் 2,500 மாணவர்களில் 500க்கும் மேற்பட்டோர் (சுமார் 20 சதவீதம்) காய்ச்சல், சளி, கடுமையான இருமல் மற்றும் உடல் வலியால் பாதிக்கப்பட்டு பள்ளிக்கு வரவில்லை. மேலும், 21 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் இதே அறிகுறிகளுடன் விடுப்பு எடுத்துள்ளனர்.
பள்ளியின் முதலுதவி மையத்திற்கு 137 மாணவர்கள் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக வந்ததை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு பேருக்கு H1N1 / Swine Flu வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 18 வரை பள்ளி வளாகத்தில் நேரடி வகுப்புகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பள்ளி நிர்வாகம் மாநகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில், பள்ளி வளாகத்தை சுற்றி அனுமதியின்றி செயல்படும் தெருவோர உணவகங்களே இந்த சுகாதார சீர்கேட்டிற்கு காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளது.
நடைபாதைகளை ஆக்கிரமித்து விற்கப்படும் உணவுப் பொருட்கள், கொட்டப்படும் கழிவுகள் மற்றும் அதனால் சேரும் எலிகள் மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்திலிருந்து 50 மீட்டர் சுற்றளவில் சுகாதாரமற்ற உணவுகள் விற்கப்படுவதைத் தடுக்கவும், சட்டவிரோத கடைகளை உடனடியாக அகற்றவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.