மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலின்போது, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. மேலும், SIR-ன்போது ஏராளமான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியது. பாஜக-வின் ஒரு பிரிவாகவும் செயல்படுவதாக குற்றம்சாட்டியது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வாக்காளர்கள் பட்டியலுக்கான பேரழிவு ஆயுதம் எனம் குற்றம்சாட்டியுள்ளார்.
ஞானேஷ் குமார் மீதான மிகக் கடுமையான விமர்சனம், UIDAI முதல் தலைமை இயக்குநராகப் பணியாற்றியவரும், கலாசார ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பெயரைக் கொண்டவருமான மூத்த ஐஏஎஸ் (IAS) அதிகாரி ராம் சேவக் சர்மாவிடமிருந்து வந்துள்ளது. SIR (எஸ்.ஐ.ஆர்) தொடர்பான ஒட்டுமொத்த நடவடிக்கையும் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் பேரழிவை விளைவிப்பதாகவும் மாறியுள்ளது என்பதை விவரிக்கும் கட்டுரை ஒன்றை அவர் எழுதியுள்ளார்.
எனவே, இது காங்கிரஸ் கட்சியோ அல்லது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியோ கூறுவது மட்டுமல்ல.
அதாவது, இவர் மோடி அரசாங்கத்தில் பணியாற்றிய ஒரு ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இவருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. இப்போது இவர் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல, ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையர்களும் (இதற்கு எதிராக) மிக வெளிப்படையாகவே தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்குவதற்கான தீர்மானத்தைக் கொண்டுவருவதற்காக, எதிர்க்கட்சிகள் ஏப்ரல் 24 அன்று நோட்டீஸ் ஒன்றை மாநிலங்களவையில் வழங்கின. உள்துறை அமைச்சர் அமித் ஷா தனக்கு என்ன சொல்கிறாரோ, அதை ஞானேஷ் குமார் செய்து வருகிறார்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (SIR) குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடிய சில நாட்களுக்குப் பிறகு ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
SIR பணிகள் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதிலேயே அதிக கவனம் செலுத்துவதாகவும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இது ஜனநாயகத்தைச் சீர்குலைத்துள்ளது என்றும் குரேஷி விமர்சித்திருந்தார்.