இந்தியா

113 சலான்கள், ரூ. 10.68 லட்சம் அபராதம் நிலுவையில் இருந்த இருசக்கர வாகனம் பறிமுதல்

வாகன ஓட்டி அதற்கான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தவறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குருகிராம் போக்குவரத்து காவல் துறையினர் எம்.டி.ஐ. சௌக் (MDI Chowk) பகுதியில் நடத்திய வாகன சோதனையின்போது, ​​மொத்தம் ரூ. 10.68 லட்சம் மதிப்பிலான 113 நிலுவை சலான்களை (போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள்) கொண்ட ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

90 நாட்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்தாத வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மூத்த போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆவணங்கள் இல்லை:

எம்.டி.ஐ. சௌக் பகுதியில் பணியில் இருந்த மண்டல அதிகாரியான ASI பிரவீன் குமார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ​​அவரது குழுவினர் ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போது வாகன ஓட்டி அதற்கான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தவறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"சரிபார்த்ததில், அந்த இருசக்கர வாகனத்தின் மீது 1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 113 சலான்கள் நிலுவையில் இருப்பதும், அதற்கான மொத்த அபராத தொகை சுமார் ரூ. 10.68 லட்சம் இருப்பதும் தெரியவந்தது.

இருசக்கர வாகனம் பறிமுதல்:

"தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது, மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் மற்றும் காப்பீடு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக இந்த சலான்கள் பெரும்பாலும் விதிக்கப்பட்டிருந்தன. போலீஸார் அந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்," என்று மூத்த போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.

போக்குவரத்து விதிகளை பின்பற்றவும், வாகனத்திற்கான அத்தியாவசிய ஆவணங்களை புதுப்பித்து வைத்திருக்கவும், நிலுவையில் உள்ள அபராத தொகையை உரிய நேரத்தில் செலுத்தவும் அனைத்து வாகன ஓட்டிகளையும் குருகிராம் போக்குவரத்து காவல் துறை செய்தி தொடர்பாளர் கேட்டுக்கொண்டார்.

SCROLL FOR NEXT