இந்தியா

கழிவறை இருக்கையின் கீழ் 6 அடி நீள நாகப்பாம்பு: குருகிராமில் பரபரப்பு!

பாம்பு கடித்தால் நாட்டு வைத்தியம் தவிர்த்து உடனே மருத்துவமனை செல்ல வேண்டும்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு வீட்டின் கழிவறையிலிருந்து வந்த தொடர் சீறல் சத்தத்தை அடுத்து, அங்கு 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் வகை நாகப்பாம்பு மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

குருகிராமின் கர்ஹௌலி கலான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவறைக்குள் இருந்து நீண்ட நேரமாக விசித்திரமான சீறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கழிவறைக்குள் தேடியும் முதலில் பாம்பு எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பாம்பு ஏதோ ஒரு இடுக்கில் மறைந்திருப்பதை உணர்ந்த குடும்பத்தினர், உடனடியாக வனவிலங்கு பாதுகாவலரான அனில் காண்டாஸ் என்பவருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

உடைத்து எடுக்கப்பட்ட கழிவறை இருக்கை

சம்பவ இடத்திற்கு வந்த அனில் காண்டாஸ், கழிவறை இருக்கையை மெதுவாகத் தட்டிப் பார்த்துள்ளார்.

அப்போது உள்ளே இருந்த பாம்பின் சீறல் சத்தம் மேலும் பலமாக இருந்தது.பாம்பு கழிவறை இருக்கையின் கீழ் உள்ள குறுகிய இடைவெளியில் சிக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, வேறு வழியின்றி கழிவறை இருக்கை முழுமையாக உடைக்கப்பட்டது. உள்ளே மறைந்திருந்த ஆக்ரோஷமான, மிகவும் விஷத்தன்மை வாய்ந்த கண்ணாடி விரியன் பாம்பு வெளியே தெரிந்தது.

மிகவும் சவாலான மற்றும் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, மீட்புக் குழுவினர் அந்தப் பாம்பை பத்திரமாக மீட்டு, குடியிருப்புப் பகுதியிலிருந்து துரமாகக் கொண்டு சென்று விடுவித்தனர்.

பாம்புகள் குடியிருப்புக்குள் நுழையக் காரணம் என்ன?

அண்மைக் காலமாக குருகிராமில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது குறித்து வனவிலங்கு பாதுகாவலர் அனில் காண்டாஸ் சில முக்கிய காரணங்களைப் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,வேகமாக வளர்ந்து வரும் நகரமயமாக்கல் மற்றும் கட்டுமானப் பணிகள் காரணமாக, காடுகளும் விளைநிலங்களும் வேகமாக அழிந்து வருகின்றன.

இயற்கை வாழிடங்கள் அழிவதால் பாம்புகளுக்குத் தேவையான இயற்கை உணவுகள் கிடைப்பதில்லை. இதனால், அவை எலிகள் மற்றும் பிற சிறு உயிரினங்களைத் தேடி மனிதர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன.

குருகிராமில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 70 பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களில் இந்த எண்ணிக்கை 200-ஐத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுக்கான எச்சரிக்கையும் விழிப்புணர்வும்!

தற்போது பருவமழைக்காலம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாம்புகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அனில் காண்டாஸ் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் தரையில் படுத்து உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

தூங்கும் போது கட்டாயம் கொசுவலைகளைப் பயன்படுத்த வேண்டும் வீட்டில் இருக்கும் உணவுகளை எப்போதும் பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.

உணவுப் பொருட்கள் சிதறிக் கிடந்தால் எலிகள் வரும், எலிகளைத் தேடி பாம்புகளும் வீட்டிற்குள் நுழையும். ஒருவேளை பாம்பு கடித்துவிட்டால், எவ்வித நாட்டு வைத்தியத்தையோ அல்லது வீட்டு வைத்தியத்தையோ நம்பி நேரத்தை வீணடிக்கக் கூடாது.

உடனடியாகப் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பாம்பு விஷமுறிவு மருந்து செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.