இந்தியா

குடியரசு தலைவர் ஒப்புதல்.. குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்!

நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய இரண்டாவது மாநிலமாக குஜராத் ஆனது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குஜராத் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

குஜராத் சட்டமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றியது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதன் மூலம், உத்தரகாண்டிற்கு பிறகு நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய இரண்டாவது மாநிலமாக குஜராத் ஆனது.

இந்த மசோதாவின்படி, வற்புறுத்தல், மோசடி அல்லது கட்டாயத்தின் பேரில் செய்யப்படும் திருமணங்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்விதிமுறையின் கீழ், திருமணங்களையும் சேர்ந்து வாழும் உறவுகளையும் பதிவு செய்வது கட்டாயமாகும்.

பொது சிவில் சட்டம்

திருமணம், விவாகரத்து, சொத்துரிமை மற்றும் தத்தெடுப்பு போன்ற விஷயங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவதே இந்த மசோதாவின் நோக்கமாகும். இந்த மசோதாவிலிருந்து பட்டியலன பழங்குடியினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டம் அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கும் என்று முதலமைச்சர் பூபேந்திர படேல் கூறிவரும் நிலையில், இந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், தேர்தல் ஆதாயங்களை நோக்கமாகக் கொண்டது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

"இந்த மசோதா குஜராத்தின் சகோதரிகளுக்காகவும் மகன்களுக்காகவும் கொண்டுவரப்பட்டது. பொது சிவில் சட்டத்தின் மூலம், வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு ஒரு படி முன்னேறியுள்ளது.

எந்தவொரு சமூகமும் பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்பட மாட்டாது. இது யாருடைய உரிமைகளையும் பறிக்காது அல்லது சுதந்திரத்தைத் தடுக்காது" என்று முதலமைச்சர் பூபேந்திர படேல் கூறினார்.

இருப்பினும், இந்த மசோதா ஆளும் கட்சியின் அரசியல் நலன்களுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இதற்கு மத்தியில் தற்போது குடியரசு தலைவர் ஒப்புதலை அடுத்து இந்த மசோதா சட்டமாகியுள்ள நிலையில் குஜராத்தில் அமலுக்கு வந்துள்ளது.

உத்தரகாண்ட்

2024 பிப்ரவரியில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் ஆனது.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது, 2022 உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பாஜக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

SCROLL FOR NEXT