இந்தியா

கல்வித்துறையில் மிகவும் பின்தங்கியுள்ள குஜராத்... அதிர்ச்சி தரும் SDG தரவுகள்!

கல்விக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் குஜராத் கவனம் செலுத்தவேண்டும்.

மத்திய அரசின் நிலையான வளர்ச்சி இலக்குகள் முன்னேற்ற அறிக்கை (2024-25), குஜராத் மாநிலத்தின் கல்வித் துறை தேசிய சராசரியை விடப் பின்தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

குஜராத்தில் 50.82% மாணவர்கள் மட்டுமே தங்களது 12-ஆம் வகுப்புப் படிப்பை முடிக்கின்றனர். இது தேசிய சராசரியான 61.14%-ஐ விட மிகவும் குறைவாகும். இதன் பொருள், மாநிலத்தில் உள்ள இரண்டு மாணவர்களில் ஒருவர் பள்ளிப் படிப்பை முழுமையாக முடிப்பதில்லை.

மேலும் 2024-25ம் ஆண்டில் குஜராத்தின் உயர்நிலைக் கல்விக்கான சேர்க்கைவிகிதம் 47.3% மட்டுமே ஆகும். ஆனால் தேசிய அளவில் இது 58.4% ஆக உள்ளது. எளிமையாக சொல்லவேண்டுமெனில் தகுதி இருந்தாலும், 52% அதிகமான மாணவர்கள் கல்லூரியில் இணைவதில்லை.

2022-23 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் தரவுகளின்படி, குஜராத்தின் கல்லூரி மாணவர் சேர்க்கை விகிதம் 26.2% ஆக உள்ளது. இது தேசிய சராசரியான 29.5%-ஐ விடக் குறைவாகும். கல்லூரி படிப்புக்கு தகுதி பெற்றாலும், 73.8% முறையாக உயர்கல்வியை பெறுவதில்லை. இதன் மூலம், கல்லூரி சேர்க்கையில் நாட்டில் குஜராத் 23வது இடத்தில் உள்ளது.

மூன்றாம் வகுப்பில் குஜராத்தில் 46% மாணவர்கள் மட்டுமே அடிப்படை மொழித் திறனைப் பெற்றுள்ளனர், ஆனால் தேசிய சராசரி 61% ஆக உள்ளது. அதேபோல், தேசிய சராசரியான 54% உடன் ஒப்பிடும்போது, ​​கணிதத்தில் 38% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

9-ஆம் வகுப்பில் கணிதப் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் குஜராத்தில் வெறும் 3% மட்டுமே, அதே நேரத்தில் தேசிய சராசரி 11% ஆக உள்ளது.

6-ம் வகுப்பில் 22% மொழித்திறன் தேர்ச்சியும், கணிதத்தில் 23% தேர்ச்சியும் பதிவாகியுள்ளது. இது முறையே 33% மற்றும் 38% ஆக உள்ள தேசிய சராசரிகளை விடக் கணிசமாகக் குறைவாகும்.

பள்ளியில் மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பது, உயர்கல்விக்கு அவர்களை கொண்டுசெல்வது, வகுப்பறை கற்றலை அதிகப்படுத்துவது, கல்வி குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடத்தில் ஏற்படுத்துவது என கல்விப்பாதையின் ஒவ்வொரு கட்டத்திலும் குஜராத் அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்துள்ளதை இந்த தரவுகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

மேலும் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பில் வேகமாக வளர்ந்து வரும் குஜராத் மாநிலம், கல்விக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தவேண்டும் என்பதை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.