காலத்திற்கேற்ப வரி அமைப்பை எளிமைப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள், பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் கூடுதல் நிவாரணங்களை வழங்கியுள்ளன.
இந்தியாவின் மறைமுக வரி அமைப்பில் வரலாற்று சிறப்புமிக்க மாற்றங்களை ஏற்படுத்திய சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டு ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பல்வேறு மாநிலங்களின் சிக்கலான வரி முறைகளை ஒருங்கிணைத்து 'ஒரே நாடு, ஒரே வரி' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்த வரி முறை, நாட்டின் பொருளாதாரத்தை முறையான கட்டமைப்பிற்குள் கொண்டு வருவதிலும், டிஜிட்டல் மயமாக்குவதிலும் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஆரம்பக் காலத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட இந்த வரி முறை, தற்போது அடுத்த கட்ட சீர்திருத்தங்களை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட போது, சுமார் 66.5 லட்சமாக இருந்த வரி செலுத்துவோரின் எண்ணிக்கை தற்போது கோடிக்கணக்கில் உயர்ந்து மிகப்பெரிய வளர்ச்சியைப் கண்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் முறையான பதிவுகளை மேற்கொண்டு வருவதால், நாட்டின் பொருளாதாரம் பெருமளவு முறைப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் வருவாய் ஈட்டும் திறன் அதிகரித்துள்ளதோடு, வர்த்தகப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து ஈ-வே பில்கள் மற்றும் ஆன்லைன் இன்வாய்ஸ் முறை ஆகியவை கட்டாயமாக்கப்பட்டு முழுமையான டிஜிட்டல் மயமாக்கல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிகப் பொருட்களின் போக்குவரத்து எளிதாக்கப்பட்டுள்ளதோடு, போலி பில்கள் மூலம் நடைபெறும் வரி ஏய்ப்பு முயற்சிகள் திறம்படத் தடுக்கப்பட்டு வருகின்றன. செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் வரித் துறையில் பயன்படுத்தப்படுவதால், நேர்மையாக வரி செலுத்துவோருக்கு எளிய முறைகளும், முறைகேடு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
காலத்திற்கேற்ப வரி அமைப்பை எளிமைப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள், பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் கூடுதல் நிவாரணங்களை வழங்கியுள்ளன. வரி விகிதங்களைச் சீரமைத்தல், வருமானத்தைத் திரும்பப் பெறும் செயல்முறைகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்குதல் போன்ற கோரிக்கைகளைத் தொழில்துறையினர் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கில், வரி முறைகளை மேலும் எளிமையாக்கி பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் தூணாக ஜிஎஸ்டி தொடர்ந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.