மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், 57-வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நாளை மறுதினம்டெல்லியில் நடைபெற உள்ளது.
முன்னதாக, இக்கூட்டம் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இக்கூட்டம் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டு, நாளை மறுதினம் நடைபெறும் என ஜிஎஸ்டி கவுன்சில் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த உயர்மட்டக் கூட்டம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி மந்திரிகள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் நேரடியாகப் பங்கேற்கின்றனர்.
மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான ஜிஎஸ்டி வரிப்பகிர்வு, வரி விதிப்பு நடைமுறைகளை எளிதாக்குதல் மற்றும் ஜிஎஸ்டி தொடர்பான முக்கியப் கொள்கை முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட உள்ளது.
வணிகர்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்குச் சாதகமாக ஜிஎஸ்டி பதிவு , கணக்குத் தாக்கல் , மற்றும் ரீஃபண்ட் வழங்கும் உத்திகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்படும்.
ஜிஎஸ்டி தொடர்பான தவாறுகளைக் கையாளுதல் மற்றும் இன்புட் டேக்ஸ் கிரெடிட் பெறுவதில் உள்ள சிக்கல்களைக் களைந்து, வரி இணக்கத்திற்கான நேரத்தையும் செலவையும் குறைப்பதற்கான முக்கியச் சீர்திருத்தங்கள் இந்த ஆலோசனையில் இடம்பெறுகின்றன.
ஓராண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு இந்த முக்கியக் கூட்டம் நடைபெறுவதால், வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.